இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முதன்மை உதவியாளர் ஆசிம் சலீம் பஜ்வா, ஊழல் முறைகேட்டுப் புகார்கள் காரணமாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தன் குடும்பத்தினர், வெளிநாடுகளில் வணிக நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு தன் பதவியைப் பயன்படுத்தி உதவினார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார் பஜ்வா. இவர், தென்பகுதி ராணுவத்தின் கமாண்டராகவும் பணியாற்றியுள்ளார். பிரதமரின் முதன்மை உதவியாளர் என்ற பதவியை இவர் ராஜினாமா செய்துவிட்டாலும்கூட, சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார் ஆணையத்தின் தலைவராக இவர் தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.
பஜ்வா குடும்ப நிறுவனங்கள், அமெரிக்காவில் தங்களின் வணிகத்தை மேம்படுத்தவும், சொத்துக்களை வாங்குவதற்கும் 52.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.