இஸ்லாமாபாத்:

பெண்மணி ஒருவரிடம் தனுத திருமண விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பெண்மணி தனது பிள்ளைகளுடன் ஆலோசனை நடத்த முடிவைத் தெரிவிப்பரா என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்  அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருபவருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், தற்போது பாகிஸ்தான் தெஹ்ரீக் –இ –இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு வயது அவருக்கு வயது 66.

இம்ரான்கான், 1995–ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ஜெமிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் பிறந்தன. ஆனால் 9 ஆண்டுகளில் மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படவே தம்பதியினர் விவாகரத்து செய்துகொண்டனர்.

பிறகு இம்ரான்கான், 2015–ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம் என்பவரை திருமணம் செய்தார். இந்த மண வாழ்க்கையும் 9 மாதங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த நிலையில் இம்ரான்கான் மூன்றாவதாக புஷ்ரா மனேஹா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பாகிஸ்தானில் பரபரப்பாக செய்தி பரவியிருக்கிறது.  40 வயது புஷ்ரா மனேஹா மூத்த சுங்க இலாகா அதிகாரி கவார் பரித்தின் முன்னாள் மனைவி ஆவார். இவர், இம்ரான்கானின் ஆன்மிக வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.

இருவருக்கும் கடந்த 1–ம் தேதி லாகூரில் ரகசியமாக திருமணம் நடந்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், திருமண  தகவலை இம்ரான்கான் மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

 

“இம்ரான்கான் எந்த பெண்ணையும் மூன்றாவதாக ரகசிய திருமணம் செய்யவில்லை. அதே நேரம் ஒரு பெண்ணிடம் திருமணத்துக்கான விருப்பத்தை கேட்டுள்ளார். இதுபற்றி அந்த பெண் தனது குடும்பத்தினரிடமும், தனது குழந்தைகளிடமும் ஆலோசனை நடத்தி தனது முடிவை தெரிவிப்பார்.

இது இருவரின் தனிப்பட்ட மற்றும் உணர்வுப் பூர்வமான வி‌ஷயங்கள் ஆகும். அதுபற்றி தவறான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது ஊடகங்களுக்கு முறையல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.