லாகூர்
வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து வருகிறார். பாகிஸ்தான் நாட்டின் விதிகளில் ஒன்றாக அந்நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், மாகாண முதல்வர்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களை வெளிப்படையாக ஏலத்தில் விடவேண்டும் என உள்ளது. அல்லது அவற்றை பொதுச் சொத்தாகப் பராமரிக்கலாம் என ஒரு தளர்வு உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுகளைத் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளன. குறிப்பாக வளைகுடா இளவரசர் அளித்த 75 லட்ச ரூபாய் மதிப்பிலான கடிகாரத்தை இம்ரான் கான் தன் நண்பர் மூலமாக துயாபில் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இம்ரான் கான் மீது குற்றச்சாட்டுக் கூறி உள்ளவர்களான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மகள் மற்றும் பாக் முஸ்லிம் லீக் தலைவர் மரியம் நவாஸ், பாக மக்கள் இயக்க தலைவர் மௌலானா பாஸ்லூர் ரகுமான் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இம்ரான் கானின் நடவடிக்கை பாகிஸ்தான் நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.