இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இருவரும் 1980 களில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அந்த ‘டாக்ஷோவில்’ பங்கேற்று பேசிய சர்பரஸ் நிவாஸ் “1984 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இம்ரான்கான் சரியாக விளையாடவில்லை.
போட்டி முடிந்து நாங்கள் இஸ்லாமாபாத் திரும்பி விட்டோம். ஒரு நாள் எனது வீட்டுக்கு, மதிய உணவு அருந்த இம்ரான்கான் வந்திருந்தார். அவருடன் அப்துல் காதிர், மோஷின் கான், சலீம் மாலிக் ஆகியோரும் வந்திருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் இம்ரான்கான் கஞ்சா புகைத்தார். அவ்வப்போது அவருக்கு ‘ஹெராயின்’ பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
“நான் கூறுவது உண்மை இல்லை என இம்ரான்கானால் சொல்ல முடியாது, வேண்டுமென்றால் அவர் என் மீது வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றும் சர்பர்ஸ் நிவாஸ் சவால் விடுப்பது போல் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான்கானின் இரண்டாம் மனைவி ரெகம்கானும் “இம்ரான்கானுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் வழக்கம் உண்டு” என முன்பு தெரிவித்துள்ளார்.
– பா.பாரதி