சென்னை: கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயநலத்தோடு சிந்திக்காமல் அதிமுக வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அவரை பெரிய ஆள் என நினைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே என கடுப்படித்தார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதுமட்டுமின்றி பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற பெயரில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இதே போல் அதிமுகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது
இது அதிமுக தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் போன்றோர், அதிமுக மீண்டும் ஒரே அணியாக இணைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்,. அதிமுகவில் பிளவுபட்ட அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு சில மூத்த தலைவர்கள் ஆதரவு அளித்தாலும், எடப்பாடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறிய ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் அதிமுக ஒன்றிணைக்கும் குழு என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒன்றுபட்ட அதிமுக என்ற கம்பீர மிடுக்கோடு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா? கட்சியை கைப்பற்றிக் கொள்வதை விட கட்சியை காப்பாற்றுவதே முக்கியம். கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.
அதிமுக ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகும் என்ற சுயநலத்தோடு சிந்திக்க கூடாது. பிளவு பட்டு கிடக்கும் நிலையில் இடைத்தேர்தலை எதிர்கொண்டு 11வது தொடர் தோல்வியை வரவு வைப்பதா?” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. உண்மையில், அதிமுக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் 1 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதிமுக தான் செயல்படுகிறது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்துகேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய எடப்பாடி, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன வாக்கு சதவீதம் பெற்றுள்ளனர்? அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவிற்கு ஒரு சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது. இதிலிருந்து கட்சி பலமாக உள்ளது என தெரிகிறது” என்றார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்விக்கு, ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. சாலையில் செல்பவர்கள் எல்லாம் குழு அமைக்கிறார்கள். அப்படி கூறுபவர்கள் யார்? கட்சியிலேயே அவர் கிடையாது. அவரை பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். அவரது கருத்தை தமிழகத்தின் கருத்து போல எடுத்துக் கொள்கிறீர்கள் என கடுப்புடன் பதில் அளித்தார்.