முருகப் பெருமான் பற்றி சில முக்கியமான தகவல்கள் பகுதி 1
முருகனைப் பற்றி சில முக்கியமான தகவல்களின் முதல் பகுதி இதோ.
1. முருகனின் திருவுருவங்கள்:
1) சக்திதரர்,
2) கந்த சுவாமி,
3) தேவசேனாபதி,
4) சுப்பிரமணியர்,
5) கஜவாகனர்,
6) சரவணபவர்,
7) கார்த்திகேயர்,
8) குமாரசுவாமி,
9) சண்முகர்,
10) தாரகாரி,
11) சேனாபதி,
12) பிரமசாத்தர்,
13) வள்ளி கல்யாண சுந்தரர்,
14) பாலசுவாமி,
15) கிரவுஞ்ச பேதனர்,
16) சிகிவாகனர் எனப்படும்.
2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1) சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2) தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3) இந்த இருவரின் சகோதரனான சிங்கமுகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
9. முருகன் இறைப்பணி செல்வர்கள்:
1) அகத்தியர்,
2) அருணகிரி நாதர்,
3) ஒளவையார்,
4) பாம்பன் சுவாமிகள்,
5) அப்பர் அடிகளார்,
6) நக்கீரர்,
7) முசுகுந்தர்,
8) சிகண்டி முனிவர்,
9) குணசீலர்,
10) முருகம்மையார்,
11)திருமுருககிருபானந்த வாரியார்,
12) வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.
10.திருப்பரங்குன்றத்தில் பிரம்ம கூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.
இன்னும் வரும்