ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுமார் 7 மாதங்கள் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா பாதுகாப்பு  நெறிமுறைகளுடன் குறைந்த அளவிலான யாத்ரிகர்களை மட்டுமே  ஹஜ் வர அனுமதி வழங்கி வருகிறது.

தற்போது ரமலானையொட்டி ஹஜ் வர அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே ஹஜ் வர அனுமதி வழங்கி வருகிறது. இதையொட்டி, அங்கு வரும் யாத்ரிகர்கள் முக்கவசம் அணிந்து,  சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தி வருகின்றனர்.

தற்போது வளைகுடா நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், பாதிப்பு தொடர்ந்து வருகிறது. சவூதி அரேபியாவில் இதுவரை  393,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் கோவிட் -19 இலிருந்து 6,700 இறப்புகள் பதிவாகியுள்ளன. 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியதாக ராஜ்யத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில்,  இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் பிறந்துள்ளதால்,  ஏராளமானோர்  புனித ஸ்தலமான மெக்கா செல்ல முயற்சி செய்து வருகின்றன.

ஆனால், மெக்கா வர விரும்புவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவை என்றும் கோவிட் -19 க்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளவர்கள் மட்டுமே ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக  ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மெக்கா வரும் நபர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே  உம்ரா செய்ய அனுமதி பெறுவதற்கும், புனித நகரமான மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்கும் தகுதி பெறுவார்கள்.

புனித நகரமான மதீனாவில் உள்ள நபி மசூதிக்குள் நுழைவதற்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என்று அது மேலும் கூறியுள்ளது.

இந்தக் கொள்கை இந்த ரமலான் மாதத்தில் இருந்து  தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை   எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு நீட்டிக்கப்படுமா என்பதும் தெளிவாக இல்லை.

இருந்தாலும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்,மெக்கா செல்ல அனுமதிபெற்று அங்கு சென்று வருகின்றனர். அவர்கள் அங்கு முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, உம்ரா யாத்திரை மேற்கொள்கின்றனர் என்றும், சமூக இடைவெளியுடன் தொழுகைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

ஆனால், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் புனித கும்பமேளாவில், சாதுக்களும், யாத்ரிகர்களும்,  எந்தவித பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல், தான்தோன்றித்தனமாக கலந்துகொண்டு வருவதால், அங்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.