மும்பை

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலையும் அவர் மனைவியையும் வெளிநாடு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடனில் தத்தளித்து வருகிறது. நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் கடனை செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும் உள்ளது. தினசரி செலவுகளை சமாளிக்கவும் முடியாததால் நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

நிறுவனத்துக்கு அதிக ளவில் கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையில் மற்ற கடன் அளித்தவர்கள் கடன் தொகையை திரும்பிப் பெற முயன்று வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி கூறியபடி இந்த நிறுவன தலைவரான நரேஷ் கோயல் மற்றும் இயக்குனர்களான அவர் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோர் பதவி விலகினார்கள்.

இந்நிலையில் இன்று மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நரேஷ்கோயல் மற்றும் அவர் மனைவி அனிதா கோயல் ஆகியோர் மதியம் 3.35 மணிக்கு கிளம்பும் துபாய் விமானம் மூலமாக லண்டனுக்கு செல்ல விமானத்தில் ஏறினார்கள். விமானம் கிளம்பி ரன் வேயில் பயணம் செய்யும் போது விமானம் திரும்ப அழைக்கபட்டது.

அவர்களை விமானத்தில் இருந்து உடனடியாக  இமிக்ரேஷன் அதிகாரிகள் இறக்கி உள்ளனர். அவர்களை வெளிநாடு செல்ல தடை விதித்தது எதற்கு என்பது குறித்த விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை.