டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும். எனவே 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளில் தனியார் மருத்துவமனை, சிறிய மருத்துவமனைகளையும் ஈடுபடுத்த வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனி நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.
கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க உயர்ந்து வரும் பாதிப்பை தடுக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். திரையரங்குகள், கலாசார, மத ரீதியான வழிபாடுகள், விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.