டில்லியின் சன்னி லியோன் என்று தவறாக தான் சித்தரிக்கப்படுவதாக அர்ஜுன் பாட்டியாலா என்கிற படத்தால் பாதிக்கப்பட்டுள்ள புனீத் அகர்வால் எனும் நபர் வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ரோகித் ஜுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள அர்ஜுன் பாட்டியாலா என்கிற திரைப்படம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இப்படத்தில், தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோருடன், நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார். அப்படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார். இந்த போன் நம்பர் சன்னி லியோனுடையது என்று தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள், தொடர்ந்து அந்த நம்பருக்கு போன் செய்துள்ளனனர். சுமார் 400க்கும் அதிகமான போன் கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த நம்பருக்கு சொந்தமான புனித் அகர்வால் என்ற இளைஞர், டில்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த சன்னி லியோன், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள புனீத் அகர்வால், “என்னால் இதற்கு மேல் நினைத்துக்கூட அதை பார்க்க முடியாது. காலை 4 மணி வரை போன் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. படத்தை இயக்கும் நபர்கள் அல்லது தயாரிக்கும் நபர்கள், அது யாருடைய எண் என்பதையாவது முதலில் சோதித்திருக்க வேண்டும். இந்த நம்பர் என்னுடைய தொழில் தொடர்புடையது. இதை என் நண்பர்களும் வைத்திருக்கிறார்கள்.

முதல் இரண்டு, மூன்று ஏன் 10 கால்கள் வரை, யாரோ என்னிடம் விளையாடுகிறார்கள். என்னை ஏமாற்றுவதற்காக நண்பர்களே இவ்வாறு செய்கிறார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து எனக்கு அழைத்து, சன்னி லியோனிடம் பேச முடியுமா ? என்று கேட்டபோது, தான் நிலையை உணர்ந்தேன். இதற்காகவே படத்தை பார்த்தேன். என் அழைப்பேசி எண் அதில் சொல்லப்பட்டிருந்தது. அழைத்தவர்கள் மீது எந்த தவறும் இல்லை. அவர்களுக்கு என் நம்பர் படத்தினரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் போலீசாரால் எனக்கு உதவ இயலவில்லை. அதற்கு மாறாக நீதிமன்றத்தை நாடும்படி அறிவுரை வழங்கினார்கள். எனக்கு இதற்காக தயாரிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. என்னுடைய எண் அதில் இருந்து நீக்கப்பட்டாலே போதுமானது தான். காலை 8.30 மணி வரை எந்த அழைப்பும் வராது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து அழைப்புகள் தான் வரும். இதனாலேயே என்னால் பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. பாதிக்கும் மேற்பட்ட கால்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்ததாகவே இருக்கிறது. படத்தின் நாயகன் தில்ஜித் அங்கு பிரபலமானவர் என்பதால் அங்கிருந்து வருகிறது. ஆனால் அதை தாண்டி, இதாலி, துபாய், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது.

எனக்கு நியூசிலாந்தில் இருந்து ஒருவர் அழைத்தார். அவர் அழைப்பை ஏற்க மறுத்ததால், வாட்ஸ்-ஆப் மூலம் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் வீடியோ கால் செய்தார். அதை நான் ஏற்காததால், அவருடைய புகைப்படங்களை எனக்கு அனுப்பி அதை சன்னி லியோனுக்கும், சன்னி லியோனின் புகைப்படத்தை அவருக்கும் அனுப்பும் படி கோரியிருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் பெண் ஒருவர் எனக்கு அழைத்து யாராவது நடிகரிடம் பேச முடியுமா ? என்று கேட்க, முடியாது என்று சொன்னபோது “நீங்களாவது என்னிடம் பேசுங்களேன் ?” என்று சொன்னார். நான் அழைப்பை துண்டித்துவிட்டேன்.

ஒரு கட்டத்தில் சன்னி லியோன் யாரென்றே தெரியாது என்று சொல்ல ஆரம்பித்த பின், என்னையே தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். நீ எங்கு இருக்கிறாய் என்று தெரியும். உனக்கு பாடம் எடுப்போம் என்கிறார்கள். என்னுடைய நண்பர்கள், உடன் பணியாற்றும் நபர்கள் மத்தியில் நான் கேலி செய்யப்படும் நபராகவே பார்க்கப்படுகிறேன். என்னை டில்லியின் சன்னி லியோன் என்றே அழைக்கிறார்கள்.

இது இப்போதைக்கு காமெடியாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அது நடக்க கூடாது. என்னால் அதை சிரித்துக்கொண்டே ஏற்க முடியும். ஆனால் விவகாரம் கையை விட்டு வெளியேறிவிட்டது. விரைவில் கால்கள் வருவது குறையும் என்று நம்புகிறேன். இதற்கு மேல் வரும் அழைப்புகளுக்கு எல்லாம், “சன்னி லியோன் குளிக்க சென்றுவிட்டார், அவரிடம் இப்போதைக்கு பேச முடியாது” என்று தான் நான் சொல்லப்போகிறேன்” என்று தெரிவித்தார்.