பெங்களூரு
தங்கள் பெற்றோர்கள் யாரென தெரியாதவர்கள் தான் மதசார்பின்மை பற்றி பேசுவார்கள் என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பாஜக வின் மத்திய அமைச்சராக இருப்பவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்க தாமதப் படுத்திய இரு மருத்துவர்களை தாக்கினார். இந்த வீடியோ வைரலாகி இவர் சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.
அதன் பின்பு மார்ச் மாதம் “உலகில் இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நிச்சயம் இருக்கும். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமெனில் இஸ்லாத்தை அடியோடி அழித்து ஒழிக்க வேண்டும்” என கூறினார். அதன் பின்பு அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அதற்கு மன்னிப்பு கோரினார். ஆயினும் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று பெங்களுருவில் நடந்த பாஜக நிகழ்வு ஒன்றில் கலட்ன்ஹுக் கொண்டு ஹெக்டே உரையாற்றினார். அப்போது, “தங்கள் பெற்றோர்கள் யார் என தெரியாதவர்கள் தான் மதச்சார்பின்மை என பேசுவார்கள். மதச் சார்பின்மை என்னும் வார்த்தையை உடனடியாக இந்திய அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்” என பேசி உள்ளார்.
அவருடைய இந்த பேச்சு குறித்து கடும் சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இது குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா ஜ க எந்த ஒரு விளக்கமும் இது வரை அளிக்கவில்லை