டில்லி:
லக்னோவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று 26 லோக்சபா எம்.பி.,க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.,க்களின் சொத்துக்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது என எம்.பி. எம்.எல்.ஏ.,கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் முதல் கட்ட விசாரணையை துவக்கியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் இன்று ஆஜரான மத்திய நேரடி வரி விதிப்பு கழகம், 7 லோக்சபா எம்.பி.க்கள், 98 மாநில எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு சந்தேகப்படும் வகையில் பலமடங்களாக அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பெயர் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் நாளை தாக்கல் செய்யப்படும் என நேரடி வரிவிதிப்பு கழகம் தெரிவித்துள்ளது. இந்த சொத்து குவிப்பு தொடர்பாக வருமான வரித்துறையும் விசாரணையை துவக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, மேலும் 9 லோக்சபா எம்.பி.க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 42 எம்எல்ஏ.க்களின் சொத்து விபரம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.