சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.