தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி நடத்தியதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சிகோடி பிரவீன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாயாவில் உள்ள ஒரு ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தாய்லாந்து போலீசார் களம் இறங்கினார்கள்.
இந்த ஹோட்டலை சுற்றிவளைத்த போலீசார் இந்த விடுதியை நடத்தி வந்த சிற்றனன் கயூலர் என்ற பெண் மற்றும் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 84 இந்தியர்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பர்மாவைச் சேர்ந்த 4 பணியாளர்கள் என 100 பேரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிற்றனன் கயூலர் அளித்த தகவலின்படி இவரது கணவரான தெலுங்கானா பாஜக நிர்வாகி சிகோடி பிரவீன் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகளை இங்கு சூதாட அழைத்து வருவார் என்றும் இதன் மூலம் ஒரு நபருக்கு 50000 பட் வசூலித்ததாகவும் கூறியுள்ளார்.
இவரது தகவலை அடுத்து சிகோடி பிரவீன் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர் மீது ஹைதராபாத்தில் சூதாட்ட விடுதி நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து சட்டத்திற்கு விரோதமாக அங்கு சூதாட்ட விடுதி நடத்தியதாக இவரை கைது செய்துள்ள தாய்லாந்து போலீசார் அந்த சூதாட்ட விடுதியில் இருந்து சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள கேமிங் சிப்கள் மற்றும் 100 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.