சண்டிகர்:
பலாத்கார சாமியார் ஆஸ்ரம மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
2 பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாமியார் ராம் ரஹீம் சிங் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடந்த வன்முறை சம்பவங்களுக்கு ஈடாக சாமியாரின் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வகையில் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆஸ்ரமத்தில் அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை இன்று முடிவுக்கு வந்தது. சர்சா சத்னம் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்ட மருத்துவமனை பதிவேடுகளின் படி சில முறைகேடுகள் சந்தேகப்படுபடியாக நடந்துள்ளது. இந்த அந்தரங்க விஷயங்களை தெரிந்த ஒரு மருத்துவர் அதன் விபரங்களை பகிர மறுத்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு சட்டம் சரியாக பின்பற்றப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. என்று போலீஸ் துணை கமிஷனர் பிரப்ஜோத் சிங் தெரிவித்தார். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் கோவிந்த் குப்தா பதில் கூற மறுத்துவிட்டார். எனினும் அங்கு பணியாற்றும் ஊழியர் கூறுகையில், ‘‘இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்ப்டடுள்ளது’’ என்றார்.
துணை இயக்குரர் சதீஸ் மேரா கூறுகையில், ‘‘கருக்கலைப்பு சட்டப்படி விதிமீறல்கள் நடந்திருப்பது மருத்துவமனையில் பதிவேடுகள் மூலம் உறுதியாகியுள்ளது. ஆறு பெண்களுக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை மறுப்பதற்கு இல்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஏற்கனவே 14 உடல்களை உரிய ஆவணம் இன்றி உ.பி. மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதோடு தோல் வங்கி உரிமம் இன்றி நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆஸ்ரமத்தில் நடந்த சோதனையில் சொகுசு கார்கள், வெடி பொருட்கள், சட்ட விரோத பட்டாசு தொழிற்சாலை. ஏகே 47 துப்பாக்கி பெட்டிகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.