இல்லத்தர(சி)சன்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

மீனு, இன்னும் இரண்டு நாள் கழிச்சி நீ வேலைக்குப் போகணும் இல்லையா ?

ஆமாங்க…. அதான் பாப்பாவைப் பாத்துக்க உங்கம்மா வருதுன்னு சொன்னாங்களே.

ஆமாம், ஆனா அவங்களுக்கு கால் அடிபட்டுடுச்சாம் அதனால வர முடியாதாம், அதான் என்ன செய்யறதுன்னுத் தெரியல என்றான் முருகன்.

மீனுவிற்கு அம்மா இல்லை, அதனால் அவள் குடும்பத்தில் இருந்தும் யாரும் வர முடியாது

மீனு, சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறாள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் வேலையில் சேர வேண்டும். முருகனும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வதால் இவனுக்கும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள நேரம் கிடையாது.

கொரோனா காலத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டில் தான் இருக்கிறான், ஆனால் குழந்தைக்கு தேவைகள் எதுவெனத் தெரியாது, அடுப்பில் எந்தவொரு அ, ஆ..வும் தெரியாது, அதனால்தான் அவன் அம்மா வருவதாக இருந்தது, இப்போது வர முடியாத சூழல், ஆனால் மீனு பணிக்கு சென்றாக வேண்டும்.

இரண்டு நாள் கழித்து மீனு பணிக்குக் கிளம்பினாள், உள்ளூர எரிச்சல் பட்டான், இருந்தாலும் முகத்தைக் கூடப் பார்க்காமல்…ம்…போய்ட்டு வா என வழியனுப்பினான்.

அடடா, குழந்தை ஈரமாக்கி விட்டதே என துணி மாற்றினான், பின் அழுகிறதென பால் புகட்டினான், பின் தவழ்ந்து வாசல் வரை சென்றவனை தூக்கி வந்தான், அதன் பின் ஒரு மூன்று மணி நேரம் தூங்கியிருப்பான் குழந்தை, எழுந்தவுடன் “வீர்…வீர்…” என்று அலறினான் என்ன செய்வதென தெரியாமல் ஒருவழியாய் சமாதானப்படுத்தினான் .

அய்யய்யோ, ஒரு நாளைக்கே எனக்கு மூச்சு வாங்குதே, இவனை எப்படி பள்ளி சேர்ப்பது வரை பார்த்துக்கொள்ள முடியும் ? என்று மலைத்தான்.

படித்த, வேலைக்குப் போகும் பெண்தான் வேண்டுமென்று அடம் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டதால் இந்த கஷ்டமா ?

பேசாமல் பத்தாம் வகுப்பு வரை படித்த உறவுப் பெண் வானதியைத் திருமணம் பண்ணியிருந்தால் கூட, இப்போது ஏன் வேலையை நான் சுதந்திரமாகப் பார்க்கலாம் என ஒரே நாளில் அவ்வளவு விஷயங்களை யோசித்து விட்டான்.

இரவு மீனு வந்ததுதான் தாமதம் குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு தடாலென அசதியில் படுத்து விட்டான்.

இப்படியே இரண்டு மாதம் சென்றது.

ஆத்திரம் தலைக்கேறியது சில சமயங்களில் இருவருக்கும் சண்டை வந்தது.

ஒரு நாள் மீனு மருத்துவமனையில் இருந்து போன் பண்ணினாள், கடுமையாக நோய் தொற்று பரவுவதால் பாதுகாப்பாக இருப்பதற்காக 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வேண்டும் எனச் சோகமாகக் கூறினாள்.

ம், சரி குழந்தையைப் பார்த்துக்கறன் என வெறுப்பாகக் கூறி போனை வைத்து விட்டான்.

நடப்பது எதுவும் தெரியாமல் பாப்பா இவனைப் பார்த்து சிரித்தது, அவன் பாரமெல்லாம் இறங்கியது.

தினம் தினம் குழந்தையைப் பார்த்துக் கொள்வதும், வீட்டு வேலைகளை செய்வதும், வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்வதும் முருகனுக்கு வேதனையாக இருந்தது.

மன வேதனையில், அவன் அம்மாவுக்கு போன் செய்தான்.

அம்மா, எப்படி இருக்க, கால் பரவாயில்லயா ?

நீ எப்படிப்பா இருக்க ?

இன்னும் 60 நாள் நடக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கப்பா.

சரிம்மா, உடம்ப பார்த்துக்கோ

ஏன் என்னப்பா ? சோர்வா பேசுற

இல்லம்மா மீனு, ஹாஸ்பிடல் போயிட்டா, அதான் நான் ரொம்ப கஷ்டப்படறேன் அம்மா.

பிள்ளையைப் பார்த்துகிறது என் வேலையாம்மா ? பேசமா நீ சொன்ன மாதிரி நம்ம உறவுக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்மா என்றான்.

….. (எதிர்முனையில் எந்த பதிலுமில்லை)

அம்மா, அம்மா…..

ம், சொல்லுப்பா என்றாள் அம்மா

ஏம்மா அழுவற மாதிரி பேசுற ?

இல்லப்பா, காலம் மாறிடுச்சுன்னு உன்னைய நெனச்சு சந்தோஷப்பட்டேன், ஆனா எதுவும் மாறலப்பா, என்றாள்

ஏன்மா ?

உன் அப்பா, வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கிட்டு சும்மா ஊர சுத்தி வருவாரு, ஒரு ரூபா கூட சம்பாதிக்க மாட்டாரு, ஆனா நான் உன்னைய தூக்கிக்கிட்டு காட்டு வேலைக்குப் போவேன், வீட்டு வேலையும் செய்வேன், ஆனால் உன்னை ஒரு மணி நேரம் கூட உன் அப்பா பாத்துக்க மாட்டார், ஆம்பளைன்னு அகம்பாவம், எனக்கு உடம்பு சரியில்லைன்னா கூட ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக் கொடுக்க மாட்டார் எனக் கூறி அழுதாள்.

(ஆ, படிக்காத அம்மாவுள்ள இத்தனை வேதனையா, புரிதலா ? என வருத்தப்பட்டான்)

அதனால முருகா நீ மீனுவையும், பாப்பாவையும் உண்மையா பார்த்துக்க, பாசமாகப் பார்த்துக்க, இதுதான் என் ஆசை என்றாள்.

பின் குழம்பு, பொரியல் வைப்பது எப்படி, குழந்தை வளர்ப்புப் பற்றி தினமும் போன் செய்து சொல்லுவாள் அம்மா.

தவிர கணினியைத் தட்டி குழந்தை வளர்ப்பு, சமையல் என தேடித்தேடி பதிவிறக்கம் செய்தான்.

அடுத்த பத்து நாட்களுக்கு அப்பாவும் பாப்பாவும் அப்படியொரு அழகான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

தான் செய்யும் சமையல், குழந்தையைப் பார்த்துக் கொள்வது என அத்தனையும் செல்போனில் படம் எடுத்தான், பின் “இல்லத்தரசன்” என்றப் பெயரில் சமூக வலைதளத்தில் பதிவிட்டான்.

பத்து நாட்கள் கழித்து வந்த மனைவிக்கு சுடச்சுட காபி, உணவு தயாரித்துத் தந்தான், ஒன்றும் புரியாமல் மீனு சாப்பிட்டாள். ஏதோ ஒரு மாற்றம் மட்டும் அவனிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.

அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கு அலுவலகம் திறந்து விட்டது.

ஆனால், முருகன் சென்று வேலையே ராஜினாமா செய்துவிட்டான்.

சமூக வலைதளத்தில் “இல்லத்தரசன்” சேனல் சக்கைபோடு போடுகிறது மீனு என்று மனைவியிடம் பேசினான்.

வீட்டைப் பார்த்துக்கிறது எவ்வளவுப் புனிதமானப் பணிங்கறது நான் தெரிந்துகொண்டேன் என சமூக வலைதளத்து கேள்விகளுக்கு பதிவிட்டான்.

வணக்கம் நான் உங்கள் அபிமான “இல்லத்தரசன்” பேசறேன் இப்ப “மோர்க்குழம்பு” வைக்கிறது எப்டின்னுப் பார்க்கலாம் என ஒரு நாளும்.

வணக்கம் நான் உங்கள் அபிமான “இல்லத்தரசன்” பேசறேன், குழந்தைகளுக்கு எப்படி போஷாக்கான சாப்பாடு தரணும்னு இன்னைக்குப் பார்க்கலாம், என்றும் படம் பதிவிட்டுக் கொண்டு இருந்தான்.

மீனு நிம்மதியாக மருத்துவமனை சென்று வந்து கொண்டிருக்கிறாள்.