இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு பாய்ந்து அங்குள்ள விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் ஜீவநதி சிந்து ஆகும். உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் செல்லவிடாமல் சிந்து நதியை தடுத்தால் பாகிஸ்தானின் கொட்டம் அடங்கிவிடும் என்று சில ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் மத்திய அரசை அறிவுறுத்தி வருகிறார்கள். இது சாத்தியமான வழிமுறையா? இப்படி செய்தால் என்னென்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
இது தொடர்பாக காஷ்மீர் பல்கலைகழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணரான ஷகீல் அகமது ராம்சூ என்பவர் ஒரு இணைய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:
இந்தியாவின் இரு மாநிலங்களுக்கு இடையே போடக்கூடிய ஒப்பந்தங்களே நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் மீறப்படக்கூடிய இந்த காலத்தில் 1960-இல் கையெழுத்தான சிந்துநதி பங்கீடு ஒப்பந்தம் இன்றுவரை மிக நேர்மையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் கண்ணியதையும் நேர்மையையும் காட்டுகிறது.
உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் நற்பெயர் இந்த ஒப்பந்தத்தை உடைப்பதால் கெட்டுப்போகக்கூடும். இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்புநாடாக முயற்சி செய்துவரும் இவ்வேளையில் இது விஷப்பரீட்சையாக முடியக்கூடும். மேலும் இந்த சிந்து நதி ஒப்பந்தத்தில் உலக வங்கியும் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இந்தியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் முடிவெடுக்க முடியாது.
கர்நாடகா போன்ற சமவெளி பிரதேசத்தில் அணை கட்டுவதோ தண்ணீரை திருப்பிவிடுவதோ சாத்தியம். ஆனால் சிந்துநதி பாய்வது வானுயர்ந்த மலைகள் உள்ள பிரதேசமாகும். இங்கு ஒரு பெரும் நதியை திசைதிருப்புவதென்பது சாத்தியமே அல்ல. அதுமட்டுமல்ல நீங்கள் நதியை திசை திருப்பக்கூடிய அடிப்படை கட்டுமானங்களை செய்துமுடிக்கவே 15 ஆண்டுகள் ஆகும்.
ஒருவேளை தண்ணீரை திருப்பிவிடுவது சாத்தியமாக இருந்தாலும்கூட சிந்துநதி என்ன வாய்க்காலா சர்வசாதாராமாக வரப்பு மாற்றிவிடுவதற்கு? காட்டாற்று வெள்ளம் போன்ற நீரை எங்கே திசை திருப்பி என்ன செய்வீர்கள்? அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா? அது சாத்தியமா? பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை திசைதிருப்பினால் அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நமது தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட கதையாகிவிடும்.
எனவே இதுபோன்ற ஆபத்தான வழிகளை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேறு நல்ல வழிகளை யோசிப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Courtesy: www.rediff.com