மும்பை: எதிர்க்கட்சி முகாம்களிலிருந்து விலகி பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில் இணையும் தலைவர்கள் முதலில் இந்துத்துவா கொள்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத்.
அவர் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முகாம்களிலிருந்து பலபேர் எங்களின் அணிக்கு வருகிறார்கள். அவர்கள் முதலில் இந்துத்துவா கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது முக்கியம்.
வெறுமனே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டுமென்ற பதவி ஆசையில் எங்களிடம் வருவது ஏற்றுக்கொள்ளப்படாது. அத்தகைய நபர்களுக்காக எங்களின் கதவுகள் திறக்கப்படாது.
எங்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வருபவர்களை நாங்கள் முழுமனதுடன் வரவேற்போம். இந்துத்துவா கொள்கையை மாநில மற்றும் தேசிய அளவில் விரிவாக கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே, ஒத்தக் கருத்துடையோர் வரவேற்கப்படுகிறார்கள்.
எதிர்க்கட்சி கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அவர்களால் தங்களுடைய தலைவர்களை தக்கவைக்க முடியவில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார்.
ஊர்மிளா மடோன்ட்கர் மற்றும் கிர்பாஷங்கர் சிங் போன்றோர் காங்கிரஸ் முகாமிலிருந்து சமீபத்தில் விலகி, காவி முகாமில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.