சென்னை: ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? முன்னாள் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மத போதகர் தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.பி ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்காத விவகாரத்தில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சம்மன் வழங்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன்? என்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் வழங்க இயலா விட்டால் தனிப்பிரிவு அமைக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி தொகுதியைச்சேர்ந்த திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? என்று காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டலம் தொடர்பாக, முன்னாள் திமுக எம்.பி. ஞானதிரவியம் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி பூசல் நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பேராயர் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபிள் என்பவர் மீது, தேவாலயத்திற்குள்ளேயே ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, ஆளும்கட்சி தரப்பு என்பதால், வழக்கு விசாரணைக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, பேராயர் பர்னபாஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பலன் இல்லை. இதற்கிடையில் தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பேராயர் பர்னபாஸ் தரப்பில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், கடந்த நவம்பர் மாதமே ஞானதிரவியம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது, நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், எம்பி – எம்எல்ஏக்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும், எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் சம்மன் வழங்க முடியாது என காவல்துறை கூறிவிட்டால் , சம்மன் அனுப்புவதற்காக தனிப்பிரிவை உருவாக்க நேரிடும். இல்லாவிட்டால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். பின்னர், முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[youtube-feed feed=1]