டெல்லி:
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவுக்கு எதிராக திமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சிஏஏக்கு எதிரான வன்முறைகள், போராட்டங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து உள்ளார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில்,’குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பவர்கள்’ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் வினீத் தண்டா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்: நாடு ஒரு முக்கியமான காலத்தை கடந்து வருகிறது, அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சி இருக்க வேண்டும், நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்படாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. எங்களது நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் மனுக்களை விசாரிப்பதால் அமைதி திரும்பும் என எண்ண முடியிவல்லை. எனவே, நாட்டில் அமைதி திரும்ப வேண்டும். வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று திட்டவட்டமாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து உள்ளார்.