மும்பை:
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பீமா கோரேகான் கலவரம் தொடர்பான வழக்கின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி, உத்தவ்தாக்கரே தலைமையிலான மாநில அரசு கோரி உள்ளது. இந்த வழக்கு திரும்பப் பெறப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல, தற்கொலை செய்துகொண்ட நீதிபதி லோயா தொடர்பான வழக்குகளையும் தூசித்தட்டி உள்ளது.
நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், லோயா வழக்கு குறித்து யாரேனும் அணுகினால், மீண்டும் விசாரிக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இது பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில உள்துறை அமைச்சராக, என்சிபி கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் உள்ளார்.
இவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, பீமா கோரேகான் வழக்கின் தற்போதைய நிலை உட்பட விரிவான அறிக்கை கோரியுள்ளதாகவும், மேலும் நீதிபதி லோயா வழக்கில், போதுமான ஆதாரங்களுடன் யாராவது கோரிக்கை வைத்தால், அந்த வழக்கு மீண்டும் விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து பேசியவர், முந்தைய பாஜக அரசாங்கத்தில், நிர்வாகத்திற்கு எதிராகப் பேசும் எவரும் ‘நகர்ப்புற நக்சல்’ என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், “தங்கள் கருத்துக்களுடன் உடன்படாத எவரும் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று அழைக்கப்பட்டனர், இது தவறு. முந்தைய அரசாங்கம் இது தொடர்பாக ஒரு முன்மாதிரி வைத்திருந்தது,” என்று குற்றம் சாட்டியவர்,
‘நகர்ப்புற நக்சல்’ என்ற வார்த்தையை புனே காவல்துறையினர் டிசம்பர் 31, 2017 எல்கார் பரிஷத் மாநாட்டிற்கும், மறுநாள் புனே மாவட்டத்தில் கோரேகான்-பீமாவைச் சுற்றியுள்ள சாதி மோதல்களையும் தொடர்ந்து உபயோகப்படுத்தியதாக கூறியவர், “பீமா கொரேகான்-பீமா வழக்கு தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், . நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான வழக்கை, யாராவது ஆதாரத்துடன் விசாரிக்க கோரினால், அதை மீண்டும் விசாரிப்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே என்சிபி தலைவர் சரத்பவார், பீமா கொரேகான்பீமா வழக்கில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.