திருவனந்தபுரம்: கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.
கேரளாவில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் விவகாரத்தில் இவர்களின் மோதல் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர், தனது உறவினர்களை நியமிக்கும்படி வி.சி.யை அறிவுறுத்துகிறார் என்றால், அது முதல்வருக்குத் தெரியவில்லை என்றால், அவர் எவ்வளவு திறமையற்றவர் என்பதை;ததானே காட்டுகிறது. அது தெரிந்தால் அவரும் குற்றவாளிதான் என்று கூறியவர், இதற்கு அவர்தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
மேலும், பல்கலைக்கழகங்களில், விருப்பு வெறுப்பு அடிப்படையிலான நியமனங்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. நான் இங்கு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன். யுஜிசியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தகுதியானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியவர், தனிப்பட்ட நியாயத்தை நான் தேடவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தேன். யாருடனும் தனிப்பட்ட சண்டை கிடையாது. நாட்டின் சட்டம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதே எனது பணி. நிர்வாகத் தலையீடு இல்லாமல் பல்கலைக்கழகங்கள் இருப்பதைப் பார்ப்பதே எனது வேலை என்றும் கூறினார்.