டில்லி

மின்சாரத் தேவை மிகவும் குறையும் போது முழு மின்வெட்டு உண்டாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் முழு அடைப்பை அமல்படுத்தி உள்ளன.  இதனால் பல தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.  இதனால் தற்போது மின்சார தேவை மிகவும் குறைந்துள்ளது.  சொல்லப்போனால் வீட்டு உபயோகம், தெருக்கள் உபயோகம், மற்றும் அவசர பணிகள் தவிர மற்ற அனைத்து மின் தேவைகளும் முழுவதுமாக குறைந்துள்ளன.

இந்தியாவில் மொத்தமுள்ள மின்சார பயன்பாடு சுமார் 100 கிகாவாட்டுகள் ஆகும்.  மற்றும் சர்வதேச அளவில் உள்ள 50 ஹெட்ஸ் அலைவரிசையை இந்தியா பயன்படுத்தி வருகிறது.  அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் ஐந்து கிரிட் எனப்படும் பங்கீட்டில் இணைக்கப்பட்டுள்ளன.   அவை, வடக்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு ஆகியவை ஆகும்.

தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதால் இந்த அலைவரிசைகள் திடீரென பாதிப்பு அடையும்.  அவ்வாறு பாதிப்பு அடையும் போது அந்த குறிப்பிட்ட பங்கீடு (கிரிட்) கீழ் வரும் பகுதிகள் மட்டுமின்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற பங்கிடு பகுதிகளிலும் முழு மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு.  இந்தியாவில் சாதாரணமாக 100 கிகாவாட்டுகளை விட அதிக அளவில் தேவை உள்ள நிலை மாறி தற்போது 1146 மெகாவாட்டுகள் தேவை மட்டுமே உள்ளன.

இதையொட்டி இந்திய மின் பங்கீட்டு அதிகாரிகள் இந்த கிரிட் களில் அலைவரிசையில் மாறுதல் ஏற்படாமல் கவனித்து வருவதாக அறிவித்துள்ளனர்.  ஆயினும் திடீரென மின்சாரத் தேவை முழுவதுமாக குறையும் போது அலைவரிசை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் எனவும் இதனால் முழுமையாக மின் வெட்டு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய இயலாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஏற்கனவே கடந்த 2012 ஆம் வருடம் ஜூலை மாதம் நிகழ்ந்த போது சுமார் 7 கோடி மக்கள் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுத் தவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.   அப்போது தென் இந்தியா இந்த விநியோக பங்கீடு (கிரிட்) இணையவில்லை என்பதால் பலருக்கு இது குறித்து தெரிய வாய்ப்பில்லை.  கடந்த 2014 ஜனவரி முதல் தென் இந்தியாவும் இந்த கிரிட் இல் இணைந்துள்ளது.