லக்னோ
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் மக்கள் தொகை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு பல அதிரடி திட்டங்களின் மூலம் மக்களுக்கு அதிருப்தி அளித்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே உலக மக்கள் தொகை தினத்தன்று மக்கள் தொகை மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்தது. அவ்வகையில் புதிய மக்கள் தொகை மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதன் மூலம் மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு மேலும் அதிக நலத்திட்டங்கள் அறிவிக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவில் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளால் மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த மசோதாவில் காணப்படும் முக்கிய தடைகள் பின் வருமாறு :
- மாநில அரசின் நலத் திட்டங்களைப் பெறத் தடை
- ரேஷன்பொருட்கள் 4 பேருக்கானது மட்டுமே வழங்கப்படும்
- உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை
- அரசு வேலைவாய்ப்புகளுக்குவிண்ணப்பிக்கதடை
- அரசுப்பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மறுப்பு
இந்தக் கட்டுப்பாடு அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளூர் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளோருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து அடுத்த 10 நாட்கள் வரை மக்கள் கருத்து அளிக்கலாம் என உபி மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அதாவது ஜூலை 19க்குப் பிறகு இந்த மசோதா குறித்து முழுமையான முடிவுகளை எடுக்க உபி அரசு தீர்மானம் செய்துள்ளது.