டி.வி.எஸ். சோமு பக்கம்

ன்று அதிகாலை, செல்போன் ஒலித்தது. அரைகுறை தூக்கத்தில் எடுத்தேன். வெளிநாட்டு எண் ஒளிர்ந்தது.

“யாராக இருக்கும்” என நினைத்துக்கொண்டே ஆன் செய்தேன். வெளிநாட்டில் வசிக்கும் தோழி ஒருவர் பேசினார்.

அவரது தந்தையார் காலத்திலேயே  அங்கு செட்டிலானது அவரது குடும்பம். அந்த நாட்டு குடிமகனையே காதலித்து மணந்துகொண்டார். இரு பிள்ளைகள். கணவன் மனைவி இருவரும்சேர்ந்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார்கள். நிம்மதியான மகிழ்ச்சியான குடும்பம்.

அவ்வப்போது அலைபேசுவார் தோழி. பொது விசயங்கள் குறித்தே அதிகம் இருக்கும். இன்றும் அப்படித்தான்.

காதல் விவகாரத்தில் நிவேதிதா என்ற 47 வயது ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பற்றி பேசினார்.

“கணவனை பிரிந்து வாழும் நிவேதிதாவுக்கு முகநூல் மூலம் இளையராஜா என்ற தீயணைப்பு வீரருடன்  அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது காதலாகி, இருவரும் தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இளையராஜா, வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதையடுத்து நிவேதிதா ஒதுங்கிப்போயிருக்கிறார். ஆனால் இளையராஜா தொடர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் நிவேதிதாவுக்கு சென்னையைச் சேர்ந்த வங்கிப்பணியாளர் கணபதியுடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே கணவரைப் பிரிந்து பிறகு ஆண் நண்பர் இளையராஜாவையும் பிரிந்த நிலையில் அந்த பெண்மணிக்கு ஆறுதல் தேவைப்பட்டிருக்கிறது. கணபதியும் உடன்பட இருவரும் காதலித்திருக்கிறார்கள்.

நிவேதிதா

இது பொறுக்காமல், நிவேதிதாவை காரேற்றிக் கொன்றிருக்கிறார் இளையராஜா.

இது என்ன அநியாயம்” என்று கொந்தளித்தார் தோழி.

மேலும் அவர், “ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த கொலை. இந்திய சமூகச் சூழல், பெண் என்பவளை ஆணுக்கு அடிமையான உயிரற்ற ஜடம் என்பதையே மனதில் பதிய வைக்கிறது.  அவள் என்ன சாப்பிட வேண்டும், உடுத்த வேண்டும் என்பதில் துவங்கி அனைத்தையும் ஆணே தீர்மானிக்க நினைக்கிறான்.

இதன் விளைவே இங்கே ஆணுக்கு இருக்கும் சுதந்திரம், உரிமை.. செக்ஸ் சுதந்திரம் உரிமை உட்பட பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது.

அவள் தனக்குத் தேவையான  எதையும் சுந்திரமாக அனுபவிக்க தடையாக இருக்கிறார்கள் ஆண்கள்” என்று பொங்கித் தீர்த்தார் தோழி.

நான், “உண்மைதான். இங்கே ஆண்கள் ஒரே நேரத்தில் மனைவியர், துணைவியர்.. இது இரண்டிலும் அடங்காத உறவுடனுடம் பெண்களுடன் பழகலாம். அது ஆண்களைப் பாதிக்காது. ஆணால் பெண்கள் இகழப்படுகிறார்கள்..”  என்றேன்.

தோழி, “ஆமாம்! சமுதாயத்தில் பெரும் அந்தஸ்துடன் உலா வரும் ஆண்கள் கூட வெளிப்படையாக மனைவி, துணைவி என வலம்வருகிறார்கள். அதுவே ஒரு பெண் கணவன், துணைவன் என்று வெளியில் வர முடியுமா” என்று கேட்டார்.

நீண்ட மவுனத்தையே என்னால் பதிலாக தர முடிந்தது.

பிறகு நான், “ இன்னொரு விசயத்தை கவனித்தீர்களா… கொல்லப்பட்ட நிவேதிதாவுக்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். மகன் அம்ரிஷ் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்திலும், கவுசல்யா என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை செய்துவருகிறார்கள்.

நிவேதிதாவின் உடல் பிரேதபரிசோதனை முடிந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்து.  காவல்துறையினர், நிவேதிதாவின் பிள்ளைகளை தொடர்புகொண்டு, உங்கள் அம்மாவின் உடலைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள், “அந்த பெண் ஒழுங்கீனமானவள். அவளது உடலை வாங்க நாங்கள் தயாராக இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பிறகு காவல்துறையினர் சமாதானப்படுத்தி உடலை வாங்கச் செய்திருக்கிறார்கள். அப்போதும் அவர்கள், “இவளது உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல விருப்பமில்லை. சென்னையிலேயே தகனம் செய்துவிடுகிறோம்” என்று சொல்லி இறுதிக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள்” என்றேன்.

இப்போது தோழி மவுனமாக இருந்தார். நான் தொடர்ந்தேன்:

“அந்த பிள்ளைகளின் நடவடிக்கை என்னை மிகவும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.  கணவனின் பிரிவுக்குப் பிறகு தன்னந்தனியாக தனது இரு குழந்தைகளை வளர்த்திருக்கிறார் நிவேதிதா.  நல்ல பள்ளி, கல்லூரிகளில் பயில வைத்திருக்கிறார். நல்ல பணியில் அமர்த்தியிருக்கிறார்.

ஆனால் அந்த பிள்ளைகள், தங்கள் தாய் வெறும் ஜடமாக இருக்க வேண்டும் எந்தவித ஆசாபாசங்களும் இல்லாதவராக இருக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். தனது காதல் விருப்பத்தை பூர்த்தி செய்துகொண்ட நிவேதிதாவை வெறுத்து ஒதுக்கியிருக்கிறார்கள்.. இது எவ்வளவு கொடுமையானது” என்றேன்.

அதற்கு தோழி, “வருத்தமான விசயம்தான். ஆனால் அந்த பெண்மணி தனக்கேற்ற துணை ஒருவரை வெளிப்படையாக திருமணம் செய்திருக்கலாம்” என்றார்.

அதற்கு நான், “உங்களுக்குத் தெரியாதா? இன்றும் இந்திய.. குறிப்பாக தமிழக சூழலில் பெண்களுக்கு மறுமணம் என்பது எவ்வளவு சிரமமான காரியம். தவிர, அப்படி மறுமணம் செய்துகொண்டால், வரும் கணவன் தனது பிள்ளைகள் மீது பாசம் செலுத்துவானா என்ற பயம் கூட, தடையாக இருந்திருக்கலாம்” என்றேன்.

தோழி, “ஆமாம்! இன்னொரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. கோயில் கருவறையிலேயே  பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட அர்ச்சகர் தேவநாதன், ஆண் – பெண்களை ஆபாச வீடியோ எடுத்து விற்பனை செய்த டாக்டர் பிரகாஷ் ஆகியோரை இந்த சமுதாயமே தூற்றியது. ஆனால் அவர்களது வழக்கு விசாரணை வரும்போதெல்லாம் அவர்களது தந்தைமார்கள் கூடவே வந்தார்கள். தங்கள் மகனுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

இவர்களில் தேவநாதனின் தந்தை சுப்பிரமணி ஒரு படி மேலேயே,” எனது மகன் தவறு செய்திருக்க மாட்டான்” என்று புலம்பினார்.

ஆனால் தனது காதல் உணர்வுக்காக… எவரையும் தொல்லைப்படுத்தாமல் ஒரு ஏற்பாடு செய்துகொண்ட நிவேதிதாவை, பெற்ற பிள்ளைகளே ஒழுங்கீனமானவள் என்று வெறுக்கிறார்கள்.

நமது சமுதாயம் ஆண்களுக்கு ஒரு நீதியும், பெண்களுக்கு வேறொன்றுமாக வகுத்து வைத்திருக்கிறது. அதிலேயே உழன்று நமது மனநிலையும் அப்படி ஆகிவிட்டது” என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தார் தோழி.

“இந்நேரம், சென்னை சுடுகாட்டில் அநாதைப் பிணமாக வெந்து தணிந்திருக்கும் குழந்தைகளின் தாயான நிவேதிதாவின் உடல்”  என்று சொல்லி போனை வைத்தேன்.