லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்து மத ஆர்வலர் கமலேஷ் திவாரியின் கொலை மாநிலத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்து அமைப்பான இந்து மகாசபையின் ஒரு அங்கமாக இந்து சமாஜ் கட்சி இருந்து வந்தது. அதன்பிறகு தனியாகப்பிரிந்த இந்த கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொல்லப்பட்டார். அவரது உடலை எரியூட்ட அவரது குடும்பத்தினர் மறுத்ததுடன் கொலை குறித்த ஒன்பது கோரிக்கைகளுக்கு முதல்வர் நேரில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
இந்த ஒன்பது கோரிக்கைகளில் இந்த கொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை, இறந்த கமலேஷ் திவாரியின் மகன்களில் ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்டவை இருந்தன. நேற்று கம்லேஷ் திவாரியின் தாய் குசும், மனைவி மற்றும் திவாரியின் மூன்று மகன்கள் ஆகியோர் முதல்வ்ர் யோகியைச் சந்தித்தனர். லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தன.
இந்த சந்திப்புக்குப் பிறகு கமலேஷ் திவாரியின் தாய் குசும், “எங்களை வலுக்கட்டாயமாக முதல்வரைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. உ பி மாநில காவல்துறை சரியான கொலையாளிகளைக் கண்டுபிடிக்காமல் எங்கள் குடும்பத்தை ஏமாற்றி வருகிறது. அத்துடன் எங்கள் குடும்பத்துக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை.
சென்ற ஆட்சியின் எனத் மகனுக்கு 17 காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றதும் அந்த எண்ணிக்கை எட்டு ஆகி அதன் பிறகு 4 ஆகக் குறைக்கப்பட்டது. இதில் எனது மகனுடன் இரு காவலர்கள் எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். மற்ற இருவர் அலுவலகத்தில் பாதுகாப்பு அளிப்பார்கள்.
ஆனால் எனது மகன் கொல்லப்பட்ட அன்று நால்வரில் யாருமே அவருடன் இல்லை. இதன் மூலம் எனது குடும்பத்துக்கு யோகி அரசு துரோகம் இழைத்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நடந்த சந்திப்பு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனது மகன் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அப்படி நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வாளைக் கையில் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.