அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வென்றால், அது நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லது; அதேசமயம், ஜோ பைடன் வென்றால் அது இந்தியாவிற்கு நல்லது என்ற ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் பொருள்பொதிந்த கருத்து உலா வருகிறது.
முதலில் டிரம்ப் – மோடி பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இருவருமே ய விளம்பரத்தில் ஆர்வம் கொண்ட தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு நலன் என்பது இவர்களுக்கு இரண்டாம் பட்சமே.
டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது, வடகிழக்கு டெல்லியில், இந்துத்துவா சக்திகள் கலவரத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதுதொடர்பாக எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத டிரம்ப், இந்தியாவே அதைப் பார்த்துக் கொள்ளும் என்று மோடிக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார்.
முன்பு, இந்தியாவிற்கு வருகைதந்த ஒபாமா கூட, தான் இந்தியாவில் இருந்த நேரத்தில் நடைபெற்ற ‘கர்வாப்ஸி’ நிகழ்வு குறித்து தனது அறிவுரையையும் கண்டிப்பையும் மோடி அரசிற்கு வழங்கிவிட்டுச் சென்றார்.
ஆனால், டிரம்ப்போ, சம்பிரதாயத்திற்குகூட, சிஏஏ சட்டத்தையோ அல்லது டெல்லி கலவரத்தையோ கண்டிக்கவில்லை. மோடி அரசின் மதமயமாக்கல் மற்றும் ஜனநாயக ஒடுக்குமுறை செயல்பாடுகளுக்கு ஆதரவானவராகவே தன்னைக் காட்டிக் கொண்டார் டிரம்ப்.
ஆனால், ஜோ பைடனும், கமலா ஹாரிசும் அப்படியானவர்கள் கிடையாது. மத சுதந்திரம் பற்றிய சிந்தனை உள்ளவர் ஜோ பைடன். மேலும், காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, அம்மக்களின் பக்கம் நிற்போம் என்று கூறியவர் கமலா ஹாரிஸ். இந்தியாவின் மத சுதந்திரமும். ஜனநாயகமும் காக்கப்பட வேண்டுமென்று கருத்துடையவர் ஜோ பைடன்.
எனவே, ஜோ பைடன் & கமலா ஹாரிஸ் வெற்றியானது, இந்தியாவுக்கு மகிழ்ச்சியானதே தவிர, மோடிக்கு மகிழ்ச்சியானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் கூட்டணி துணை போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: த பிரிண்ட்