டி.வி.எஸ். சோமு பக்கம்:

1998 அல்லது 99. “குமுதம்” வார இதழில் செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.  பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தே அதிகம் பேட்டி எடுத்திருக்கிறேன். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

ஆனாலும் அவ்வப்போது, “காண்ட்ரவசி கிறுக்கு” என்னைப் பிடித்துக்கொள்ளும். அந்த மாதிரி நான் எடுத்த பேட்டிகள் சிலவற்றில் பிறகு எனக்கே உடன்பாடில்லாமல் போய்விட்டது. அவற்றில் ஒன்றுதான் நா. காமராசன் அவர்களை, நான் எடுத்த பேட்டியும்.

“யாரையாவது வம்பிழுக்கிற மாதிரி பேட்டி எடுக்கணும்” என்று நண்பர்களிடம் பேசும்போது சொன்னேன். அப்போது எனக்கு நெருங்கய நண்பராக இருந்தார் கவிஞர் ஒருவர். திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் முயற்சியில் வெற்றி பெற்று, ஓரிரு பாடல்கள் எழுதியிருந்தார்.

அவர் என்னிடம், “நா.காமராசரிடம் பேட்டி எடுங்கள்.  அதுவும் இரவு ஏழு மணிக்கு மேல் போய்ப் பாருங்கள்…எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்..” என்று சிரித்தார்.

எனக்கும் அப்போதைக்கு அப்படியொரு பேட்டி தேவையாக  இருந்தது.

நா.காமராசனின் கவிதைகள் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு. “கறுப்பு மலர்கள்” ஒன்று போதும், அவர் பெயர் சொல்ல. ஏன்.. அவர் எழுதிய ஒவ்வொரு கவிதையுமே அற்புதம்தான்.

புதுக்கவிதைகளுக்கு வழியமைத்துக்கொடுத்தவர்.

திரைப்பாடல்களில்கூட, “போய்வா நதி அலையே..” என புது  எண்ணங்களைக் கொட்டியவர்.

ஆனால் தற்போதைய தேவை… யாரையாவது யாராவது திட்ட வேண்டும்…. ரெண்டு பக்கம்.  அதற்கு நா. காமராசன் தேவை. அவ்வளவுதான்.

அப்போது நான் குடியிருந்த டிரஸ்ட் புரம் பகுதியில்தான் நா. காமராசன் வீடும் இருந்தது. (இருக்கிறது)

என் நண்பர் சொன்னது போல, கவிஞர் நா. காமராசன் வீட்டுக்குச் சென்றேன். இரவு ஏழு மணிக்கு மேலேயே ஆகியிருந்தது.

நா. காமராசன்

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். புன்னகையுடன் வரவேற்றார்.

அவரிடம் கேட்க எத்தனையோ  அவசியமான வினாக்கள் இருந்தும், சர்ச்சைக்குரிய கேள்விகளையே கேட்டேன் …

அவ்வளவுதான்… வைரமுத்து உட்பட பலரையும் கடுமையாக வசைபாட ஆரம்பித்துவிட்டார். “கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்ல” என்றார்.

அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டுதான். ஆனால் அதைச் சொன்ன முறை திகிலடிக்க வைத்தது.  அத்தனை ஆவேசம்.. ஓங்காரக்குரலில் மிகக் கடுமையான வார்த்தைகளால் பலரையும் விளாசினார்.

நேரம் செல்லச் செல்ல  அவரது உக்கிரம் மிக அதிகமானது. அந்த நேரத்து குழந்தைத் தனம் என்றே நான் எடுத்துக்கொண்டேன்.

ஆகவே, அவரது உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கவைத்து  மேலும் கடுமையான பதில் வாங்க எண்ணினேன்.

அவரிடம்  “நிறைய பேர் தப்பு பண்றாங்கனு ஆத்திரப்படுறீங்க.  உங்களை உலகத்தின் சர்வாதிகாரியா நியமிச்சா என்ன செய்வீங்க” என்றேன்.

“இவர்கள் அத்தனை பேரையும் சுட்டுக்கொல்வேன்” என்பதாக பதில் வரும் என்பது என் எண்ணம்.

எனது கேள்வியை உள்வாங்கியவர், சட்டென அமைதியானார்.  உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

கண்கள் பளபளக்க நா.காமராசன் சொன்னார்:

“அப்படி என்னை சர்வாதிகாரி ஆக்கினா, உலகத்தில யாருமே பசிச்ச வயிறோட இல்லாத நிலையை உருவாக்குவேன்.”

நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் தொடர்ந்தார்:

“ஆமா தம்பி.. உலகத்துல பிறக்குற அத்தனை பேருக்குமே இங்கே வாழ, சாப்பிட.. அத்தனைக்கும் உரிமை இருக்கு. ஆனா நிஜத்துல அப்படி நடக்குதா?  நம்ம கண்ணு எதுக்கவே எத்தனை பேரு ஒருவேளை சோததுக்கு இல்லாம கையேந்தி நிக்கிறான். இந்த நிலைமையை மாத்தணும் தம்பி!”