மும்பை
தாம் ராகுல் காந்தியை சந்தித்திருந்தால் பாஜக தோல்வி அடைந்திருக்கும் என படேல் இன தலைவர் ஹர்திக் படேல் கூறி உள்ளார்.
படேல் இன தலைவரான ஹர்திக் படேல் கடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களில் வென்று அரசு அமைத்தது. காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை எனினும் சென்ற முறையை விட இப்போது அதிக இடங்களை பெற்றுள்ளது.
ஹர்திக் படேல் நேற்று மும்பையில் ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். ஹர்திக் தனது உரையில், “நான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களித்தேன். அவர் எங்கள் படேல் சமூக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு அளித்து முன்னேற்றுவார் என்னும் நம்பிக்கை அப்போது இருந்தது. ஆனால் அவர் அவ்வாறு நடக்கவில்லை. அதனால் நான் படேல் இனத்தவருக்கு ஒதுக்கீடு கேட்டு போராடினேன்.
எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள ஒரு பெரிய குஜராத் அரசு அதிகாரி எனக்கு ரூ.1200 கோடி பணம் கொடுக்க முன் வந்தார். இட ஒதுக்கீட்டுக்காக உயிர் இழந்த இளைஞர்களுக்கு நான் பணம் வாங்கி துரோகம் இழைக்க விரும்பவில்ல்லை. படேல் இன இட ஒதுக்கீடு அளிப்பதாக காங்கிரஸ் அரசு உத்திரவாதம் அளித்ததால் நான் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தேன்.
நான் ராகுல் காந்தியை சந்திக்காதது எனது பெரிய தவறு. நான் மாயாவதி, நிதிஷ் குமார் மற்றும் உதவ் தாக்கரே ஆகியோரை சந்தித்ததை போல் ராகுல் காந்தியை சந்தித்து இருக்க வேண்டும். நான் அவரை சந்தித்திருந்தால் பாஜக தோல்வி அடைந்திருக்கும். தற்போது கிடைத்துள்ள 98 இடங்களுக்கு பதிலாக 78 இடங்களை பாஜக பெற்றிருக்கும்.” என கூறி உள்ளார்.