சென்னை

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தாம் அரசியலில் நுழைவதில் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கடந்த பாஜக ஆட்சியின் போது மத்திய அரசின் போக்கு பிடிக்காமல் ராஜினாமா செய்தார். பொருளாதார வல்லுனரான ரகுராம் ராஜன் அதன் பிறகு அமெரிக்காவில் பொருளாதார பேராசிரியராக பணி புரிய தொடங்கினார். மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பேற்க அவர் அழைக்கப்பட்ட போது அவர் அந்த அழைப்பை மறுத்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நியாய் என்னும் குறைந்த பட்ச ஊதிய திட்டத்தை அறிவித்தது. பாஜக அந்த திட்டம் நடைமுறைக்கு உதவாத திட்டம் எனவும் அதை அமைப்பது முடியாது எனவும் கூறியது. இந்நிலையில் ரகுராம் ராஜன் அது குறித்து ஆராய்ந்து அது சாத்தியமான ஒரு திட்டம் எனவும் ஒரு சில கட்டுப்பாட்டுடன் திட்டம் தொடங்கினால் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் தெரிவித்தார்.

அதை ஒட்டி ரகுராம் ராஜன் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அந்த அரசின் நிதி அமைச்சராக ரகுராம் ராஜன் பணி புரிவார் எனவும் ஊகங்கள் பரவின. சமீபத்தில் ரகுராம் ராஜன் சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன், “நான் அரசியலில் இறங்கப் போவதாக பல ஊகங்கள் நிலவி வருகின்றன. நான் அரசியலில் இறங்கினால் எனது மனைவி என்னை விட்டு விலகி விடுவார். ஏனென்றால் எனது குடும்ப உறுப்பினர்கள் நான் அரசியலில் இறங்கக் கூடாதுஎன எண்ணி வருகின்றனர். எனக்கும் அரசியலில் இறங்க ஆர்வம் கிடையாது. எனது உரைகளை பயன்படுத்தி யாரும் வாக்கு சேகரிக்கலாம். என்னால் அது முடியாது.

அதைப்போலவே நான் அமைச்சராக பதவி ஏற்பேன் என்பதும் தவறான ஊகம் ஆகும். எனக்கு பிடித்தது கற்பித்தல் மட்டுமே ஆகும். நான் தற்போது அந்தப் பணியை நன்கு செய்து வருகிறேன். புதியதாக ஒரு புத்தகம் ஒன்றை எழுதி உள்ளேன். அது விரைவில் வெளியாக உள்ளது. நான் தற்போது செய்யும் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பாஜக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளன. இதில் நான் முந்தைய அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எவ்வித வித்தியாசமும் காணவில்லை. முக்கியமாக முந்தைய அரசின் திட்டமான ஜி எஸ் டி மற்றும் ஆதார் ஆகியவற்றை இந்த அரசு அமுல்படுத்தியது நல்லதாகும். ஆனால் மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது மிகப் பெரிய விவகாரமாகி உள்ளது.. வருமானம் இல்லாத போது எந்த ஒரு நல்ல திட்டமும் மக்களை கவராது.

அடுத்து வரும் அரசு பாஜகவாக இருந்தாலும் சரி காங்கிரசாக இருந்தாலும் சரி வேலைவாய்ப்புக்கள் அமைப்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாம் எந்த துறையில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதை பொருத்தே முதலீட்டை அளித்து வருகின்றனர்   தற்போது சந்தையில் அதிகம் தேவைப்படும் பொருட்களின் மீது கவனம் செலுத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்து வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும்.

என்னை பொறுத்தவரை நியாய் என்னும் குறைந்த பட்ச ஊதிய திட்டம் மிகவும் நல்ல திட்டமாகும். அதை சரியான முறையில் அமுல் படுத்த வேண்டும். அப்படி செய்தால் அந்த திட்டம் வெற்றி அடையும். பல வெளிநாடுகளுக்கும் இந்த திட்டம் ஒரு முன் மாதிரியாக அமையும்.” என தெரிவித்துள்ளார்.