சென்னை: பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகஅரசை கடுமையாக சாடியுள்ளது.
கால்பந்து வீராங்கனை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் முன்ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த மருத்துவர்கள் கைது செய்யப் பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத், மாநிலத்தலைவர் டாக்டர் த.அறம், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியவதாவது,
கால்பந்தாட்ட வீராங்கனை, மாணவி பிரியா மரணம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பிரியாவின் மறைவுக்கு அஞ்சலியையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதலையும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் இழப்பீடை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது.
பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடுகள், கவனக் குறைவு உள்ளிட்ட அனைத்தையும் குறித்து விரிவான முழுமையான விசாரணை நடுநிலையோடு நடத்தப்பட வேண்டும். அதற்கென எய்ம்ஸ், ஜிப்மர் நிறுவனங்களின் மருத்துவ நிபுணர்களும் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும்.உடற் கூறு ஆய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். அதன் மூலம் இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.
ஆனால், அதற்கு புறம்பாக, அரசு மருத்துவர்களை சட்டத்திற்கு புறம்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக கைது செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். மருத்துவர்கள் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் கிடைப்பதை பாதிக்கும் வகையில், கவனக் குறைவுகள் ஏற்படும் வகையில் நமது அரசு மருத்துவத் துறையில் கட்டமைப்பு குறைபாடுகள், போதாமைகள் உள்ளன. ஊழியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இவற்றை எல்லாம் போக்காமல், கவனக்குறைவுகளால், பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகளின் குறைபாட்டை மறைக்க, மருத்துவர்களை, ஊழியர்களை பலிக்கடா ஆக்குவது சரியா?
மருத்துவத் துறையில் உள்ள பல குறைபாடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகளுக்கு, நவீன கருவிகள் இல்லாததற்கு, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆன்டி பயாட்டிக்ஸ் மருந்துகள் இல்லாததற்கு, போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாததற்கு, சிகிச்சை வழங்களில் (பணிமுறை சார்ந்த நடைமுறை ஒழுங்கு முறை) இல்லாமை, (நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள் அறுவை சிகிச்சை பாதுகாப்பு சரிபார்ப்பு பட்டியல்) போதிய அளவு இல்லாமை போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்களை பலிக்கடா ஆக்குவது நியாயமல்ல.
அரசு தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்கக் கூடாது. இலக்கு நிர்ணயித்து மருத்துவர்களை அறுவை சிகிச்சைகளை செய்யவைப்பது, பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இலக்குகளை அடையாவிட்டால் பணி இடமாற்றம் என மிரட்டுவது கூடாது. இலக்குகள் நிர்ணயம் என்பதை கைவிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் போன்ற பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யக் கூடாது. அது போல் ஒரு மருத்துவமனையின் அளவு மற்றும் கட்டமைப்பு, வசதிகளுக்கேற்ப என்னென்ன அறுவை சிகிச்சை செய்ய முடியுமோ அந்தந்த அறுவை சிகிச்சைகளை மட்டுமே அங்கு சேய்ய வேண்டும். போதிய அடிப்படை வசதிகள், ரத்தவங்கி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாத, நல்ல அறுவை அரங்கு இல்லாத, மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள், மயக்க மருத்துவர்கள் இல்லாத இடங்களிலும் பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இது தாய் மற்றும் சேய்க்கு பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இறப்புகளையும் உருவாக்குகிறது. இப்போக்கை கைவிட வேண்டும்.
அனைத்து வசதிகளும் உள்ள சீமான்க் சென்டர் போன்ற உயர்மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சைகள் என்பது அறுவை சிகிச்சை நிபுணரை மட்டுமே சார்ந்ததல்ல. அது ஒரு கூட்டு சிகிச்சை முறை. கூட்டுச் செயல்பாடு. அறுவை சிகிச்சைக்கு முந்தைய பிந்தைய கவனிப்புகளில் பலரும் செயல்பட வேண்டியுள்ளது. இதில் எங்கு குறைபாடு ஏற்பட்டாலும் பிரச்னை ஏற்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் உபகரணங்கள், பேண்டேஜ் துணிகள், பஞ்சுகள் எண்ணிக்கை, கருவிகளின் எண்ணிக்கை பார்க்கப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்னரும் எண்ணிக்கை சரிபார்க்கப்படும். இதற்குப் பொறுப்பானவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படும்.
சிகிச்சையில் குறைபாடு மற்றும் கவனக்குறைவு ஏற்படாமல் தடுக்க சரிபார்ப்பு பட்டியல், நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள், பரிந்துரை கொள்கை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு மற்றும் தொடர் பயிற்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதல்வர் மருத்துவக் காப்பீட்டின் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும், அதன் மூலம் அங்கு பணிபுரியும் சில செவிலியர்களுக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், மருந்துகள் வாங்க வேண்டும் என்ற நிலையால், காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளின் சேவைகள் மருத்துவக் காப்பீடை அடிப்படையாகக் கொண்டு மாற்றப்படுவதை கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும், பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக செய்யப்பட வேண்டும்.
சுகாதாரத்துறையில், அழைப்புப் பணி முறையை ஒழித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து பணி செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். கடந்த 10 ஆண்டு களில் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் சிறப்பு மருத்துவம் அரசு மருத்துவத் துறையில் புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. இப்பிரிவுகளுக்கும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், இசிஜி டெக்னீசியன்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், லேப் டெக்னீசியன்கள் போன்ற மருத்துவப் பணியாளர்களை போதிய அளவில் இல்லை. இந்த இடங்களுக்கு நிரந்தரமான அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில்டி எம்இ, டிஎம்எஸ், டிபிஎச் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களில் பலருக்கு 24 மணிநேரம் வரை தொடர்ந்து வேலை வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக மருத்துவர்களின் உடல்நிலை ,மனநிலை பாதிக்கப்படுகிறது. குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. பணியில் ஏராளமான கவனக் குறைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த முறையை முற்றிலுமாக உடனடியாக நிறுத்திட வேண்டும்.
எட்டு மணி நேரப் பணியை சுழற்சி அடிப்படையில் வழங்கிட வேண்டும். அதற்கு மாறாக 24 மணி நேரம் தொடர்ந்து பணி செய்ய வற்புறுத்தும் உயர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 24 மணிநேரம் முதல் 36 / 48 மணி நேரம் வரை தொடர்ந்து பணி வழங்கப்படுகின்றது. இது கடும் உடல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். பல்கலைக்கழகம் அனுமதித்துள்ள விடுமுறைகளை வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளில், மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் வேலை செய்யும் பொழுது, அவர்களை அவர்கள் பணி செய்யும் போது, அந்தத் துறைக்கு தொடர்பே இல்லாத நோயாளிகளின் உறவினரோ அல்லது பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்பவர்களோ செல்போனில் விடியோ எடுப்பது, அதை மீடியாவுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவது போன்ற செயல்களால், தமிழக சுகாதாரத்துறையில் பணியாளர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையில், அச்சம் மற்றும் பதட்டத்தோடு பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 19,000 மருத்துவர்களின் கடினமான உழைப்பால், ஒரு நாளைக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான புற நோயாளி களுக்கும், ஆயிரக்கணக்கான உள் நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சைகளை வழங்குகின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்பட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. இது பாராட்டத்தக்கது. இவற்றை மேலும் அதிகரிக்க அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
சிகிச்சை முறைகளில், மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு உணர்ச்சிகரமான முறைகளில் தண்டனைகளை வழங்குவது, அத்துறை சார்ந்தோருக்கு விரக்தியையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
எதிர்பாராத விதத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படும் போது மருத்துவத் துறை பணியாளர்களுக்கு சட்ட உதவி வழங்கிட வேண்டும். அவர்களுக்கு தொழில் காப்பீடு வழங்கிட வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தமிழக அரசே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள், தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி நிறைவேற்றப்படாததால், மிகுந்த மன அழுத்தத்துடனும், வேதனையுடனும் மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
மருத்துவப் பணியாளர்களின் எழுத்துப் பணி, ஆவணப்படுத்தும் பணி, காப்பீடு தொடர்பான பணி போன்ற மருத்துவம் சாராத பணிகளுக்கான நேரம் மிக அதிகமாகவும், நோயாளிகளை கவனிப்பதற்கான நேரம் குறைவாகவும் உள்ளது. கணினி மயமாக்கல் மற்றும் பிற திட்டத்தின் மூலமாகவும் அதை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ .ஆர். சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்