ராஜ்கோட்,
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ளது.
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 26ந்தேதி முதல் குஜராத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக குஜராத் வந்த ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்,.
பாரதியஜனதாவின் கோட்டையான குஜராத்தில் தற்போதுவிஜய் ரூபானி முதல்வராக இருந்து வருகிறார். ஆனால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதாவின் வெற்றி வாய்ப்பு சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அரசுக்கு எதிராக ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின் போராட்டமும், உனா நகரில் பசுவதையை காரணம் காட்டி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தன மான தாக்குதலையடுத்து தலித் மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய மாபெரும் போராட்டம் ஆகியவை குஜராத்தில் பாரதியஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்த சமயத்தில் ராகுல்காந்தி தற்போது தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அவரை வரவேற்ற கிராம மக்கள் மாட்டுவண்டியில் அழைத்துச்சென்று உபசரித்தனர்.
பிரசார சுற்றுப்யணத்தின்போது கிராமம் தோறும் செல்லும் ராகுல்காந்திக்கு அந்த பகுதி கிராமத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர்க ளின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி, விவசாயிகளை மறந்து விடுகிறார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தால் ஏராளமானோர் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது பாரதியஜனதா தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.