இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து பாஜக அரசு உளவு பார்த்ததா? பிரியங்கா காந்தி சந்தேகம்

Must read

டெல்லி:

வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக கிளம்பி உள்ள நிலையில், இஸ்ரேலிய நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டிருக்குமோ என்று சந்தேகம் கிளம்பிய பிரியங்கா காந்தி, அப்படியிருந்தால்,  அது மிகப்பெரிய உரிமை மீறல் என்று என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த, முக்கியமான அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளின் மொபைல் போன் செயல்பாடுகள், வாட்ஸ்அப் செயலி மூலம், திட்டமிட்டு உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம்  இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப் மீதான வழக்கில்,  கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் விசாரணையின்போது, இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய அரசு சார்பில், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை உளவு பார்த்த மத்திய அரசு வசமாக சிக்கிக்கொண்டது. இதை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து,   காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வாட்ஸ்அப் உளவு குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ” இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசோ அல்லது பாஜகவோ பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் தகவல்களை உளவுபார்த்திருந்தால் அது ஒட்டுமொத்த உரிமை மீறல்,  இந்த ஊழல் தேசிய பாதுகாப்புக்கு விரும்பத்தகாத பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதற்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள , மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article