மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவ்சேனா கட்சிகள் ஆட்சி அமைக்காவிடில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து முடிவெடுக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறி உள்ளார்
நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் 54 இடங்களும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது அரசு அமைக்க 145 இடங்களில் வெற்றி பெறா வேண்டிய நிலை உள்ளது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற போதிலும் முதல்வர் பதவி தகராற்றில் அரசு அமைக்க இயலாத நிலை உள்ளது.
தற்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. ஆனால் மத்திய அரசில் பாஜகவுடன் சிவசேனா கட்சியின் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயங்கி வருகின்றனர். அதே வேளையில் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதைக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலர் விரும்பாத நிலை உள்ளது.
எனவே அந்த உறுப்பினர்கள் டில்லிக்குச் சென்று சிவ்சேனாவுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்கலாம் என தலைமையைக் கேட்டுக் கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமை இந்த யோசனைக்கு வரவேற்பு அளிக்கத் தயங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது அவரிடம் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கூட்டணி ஆதரவு அளிக்குமா என கேட்கப்பட்டுள்ளது. அசோக் சவான், “காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டுமென மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக அரசு அமைக்கக் கூடாது என காங்கிரஸ் எண்ணுகிறது.
கடந்த ஐந்து வருடங்களாக மாநில மக்கள் குறிப்பாக விவசாயிகள் கடும் துயரை அனுபவித்து வருகின்றனர். எனவே பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்காவிடில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.