புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, சுகாதாரத் துறையின் கவனம் முழுவதும் அந்நோயின் மீதே இருக்கும்பட்சத்தில், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களின் விளைவான மரணங்கள் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
காசநோய் தடுப்பு அமைப்பு, இம்பீரியல் கல்லூரி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் போன்ற சில நிறுவனங்கள் இணைந்து மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.
அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது; இந்தியாவில் போடப்பட்டும் ஒவ்வொரு மாத ஊரடங்கிற்கும் 2020 முதல் 2025 வரை கூடுதலாக 40,685 பேர் காசநோயால் மரணிப்பார்கள். 3 மாத ஊரடங்கு ஏற்படுத்தும் தாக்கத்தால், 2021ம் ஆண்டில் உலகளவில் காசநோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்தில் 5 முதல் 8 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருப்போம். 2020 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை 65 லட்சம் கூடியிருக்கும்.
இறப்பு எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்திருக்கும். 2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியா என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சூழ்நிலைகள் முன்னுரிமையை மாற்றக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் மலேரியா மரணங்களை இரட்டிப்பாக்கும் என்றும், ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் 6 மாத இடையூறு ஏற்பட்டால் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 50 லட்சத்திற்கு அதிகமான மரணங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.