டில்லி: 

பாலாறு பிரச்சினை காரணமாக நேற்று டில்லி நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என ஆந்திர அரசு பிடிவாதம் பிடிவாதம் செய்ததால், டில்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

சென்னை உள்பட வட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாலாறு உள்ளது. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் பாலாற்று நீரை நம்பியே உள்ளது.  அதுபோல, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் மற்றும் குடிநீருக்கும் பாலாற்று நீரை நம்பி யுள்ளது. இதற்காக மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளது.

ஆனால், ஒப்பந்தத்தை   மீறி பல்வேறு தடுப்பணை களை ஆந்திரம் கட்டியுள்ளது.  சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணையின் உயரத்தை 50 கோடி ரூபாய் செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது

இந்த விவகாரம் குறித்து டில்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தில் அதன் செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாலாற்றில் தடுப்பு அணை புதிதாக கட்டக்கூடாது என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆட்சேபனை தெரிவித்த ஆந்திரா, பாலாற்றில் அணை கட்டியே தான் தீருவோம் என தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை,  கேரளாவுடன் முல்லைபெரியார் பிரச்சினை… தற்போது ஆந்திராவுடன் பாலாறு பிரச்சினை…என தமிழகம் தனது மாநிலத்தை சுற்றி உள்ள அண்டை மாநிலங்களிடையே சுமூகமான உறவுகளை பேணாமல் பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக பாதிப்பப்படுவது நடுத்தர வர்க்கத்தினரும், அடிமட்ட மக்களும்தான்…