புதுடெல்லி: தலையில் அடிபட்டு கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரிக் வேதத்தில் இடம்பெற்ற மகாமிரித்யுன்ஜயா என்ற மந்திரத்தை ஓதி, அதன்மூலம் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துதல் என்ற ஒரு ஆய்வு திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்று அழைக்கப்படும் ஒரு உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, இத்தகைய விஷயங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதானது அறிவார்ந்த மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு கூத்து நடந்துள்ளது டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் என்பது இன்னும் ஒரு அதிர்ச்சியான விஷயம். டாக்டர்.அசோக் குமார் என்பவர்தான் இத்தகைய ஆய்வை தான் மேற்கொள்ள விரும்புவதாக விண்ணப்பித்தவர்.
இவர் முதலில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இதற்காக விண்ணப்பித்தபோது, இது அறிவியலுக்குப் புறம்பானது என்றுகூறி இவரின் திட்ட முன்வரைவு நிராகரிக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஐசிஎம்ஆர் அமைப்பிற்கு விண்ணப்பித்து இவரின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்பொருட்டு இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் மாதம் ரூ.28000 நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராம் மனோகர் லோகியா மருத்துவமனையும் இவரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், கோமா நோயாளிகளுக்கு மந்திரம் ஓதுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்துள்ளார் டாக்டர்.அசோக் குமார்.
நாட்டின் உயர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இப்படியான பகுத்தறிவுக்குப் புறம்பான விஷயங்களுக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்கிறதே என்று கடும் விமர்சனங்களும் கண்டனக் குரல்களும் பரவலாக எழுந்துள்ளன.