டெல்லி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.
மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை, இரும்பு, எவர்சில்வர், நான்-ஸ்டிக், செராமிக் பாத்திரங்கள் வரை பல வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும், சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
“இந்தியர்கள் நான்-ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்க வேன்டும்., சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். நான்-ஸ்டிக் குக்வேர் நீண்ட காலமாக அதன் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமையலுக்கு வசதியான பாத்திரமாக கருதப்படுகிறது. அதனை சுத்தம் செய்வதும் எளிது.
ஆனால் நான்-ஸ்டிக் குக்வேர்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கான காரணம், ஒன்று பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS). இவை டெஃப்ளான் போன்ற நான் – ஸ்டிக் பூச்சுகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். நான் – ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடலாம். இதனால் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். இந்த புகைகளை உள்ளிழுப்பது சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் உள்ள நான்-ஸ்டிக் பூச்சுகள் காலப்போக்கில் மோசமடையலாம், குறிப்பாக அதிக வெப்பநிலையில் நான்-ஸ்டிக் பூச்சு சிதைவதால், சமைக்கும் போது உணவில் கசிந்து, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நுகர்வோர் உடலில் செல்லும் அபாயம் உள்ளது. இது குறிப்பாக அமில உணவுகளை சமைக்கும் போது அல்லது உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது நான் – ஸ்டிக் பூச்சுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.”
என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.