லண்டன்: ஐசிசி அமைப்பு இரண்டாவது முறையாக டிவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள ஒரு பதிவானது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
2019ம் உலகக்கோப்பை சமயத்தில், சச்சின் டெண்டுல்கருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டது ஐசிசி. அதில் ‘சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
தற்போது, ஆஷஸ் மூன்றாவது டெஸ்டில் பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டதையொட்டி, அதே படத்தை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐசிசி. அப்படத்தில் தற்போது ‘நாங்கள் சொன்னோம் அல்லவா’ என்ற பொருள்படும்படியான வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஐசிசி அமைப்பின் இந்த செயலுக்குத்தான் உலகம் மழுவதிலுமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. டெண்டுல்கரைப் போன்ற ஒருவருடன் பென் ஸ்டோக்ஸை எப்படி ஒப்பிட முடியும் என்று கேட்டுள்ளனர் அவர்கள்.
மேலும், டெண்டுல்கர் அடித்த மொத்த ரன்கள் எவ்வளவு? தற்போது பென் ஸ்டோக்ஸ் அடித்துள்ள மொத்த ரன்கள் எவ்வளவு? இருவரும் அடித்த சத எண்ணிக்கை எவ்வளவு? என்பது போன்ற ஒப்பீடுகளுடன் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வருகிறார்கள் டிவிட்டர்வாசிகள்.