துபாய்: நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில், வெற்றியை நிர்ணயிப்பதற்கான சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணியை நிர்ணயிக்கும் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது.
இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின.
ஆட்டம் ‘டை’ யில் முடியவே, சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. அதுவும் ‘டை’ ஆகவே, இறுதியில் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில், உலகக் கோப்பை இங்கிலாந்திற்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து 24 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.
இந்த விதிமுறை மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. கேலியும் கிண்டல்களும் பறந்தன. பல முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களும்கூட இந்த விதிமுறை தொடர்பாக ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரினர்.
இந்நிலையில், இந்த அதிக பவுண்டரி விதிமுறை நீக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேசமயம், போட்டி ‘டை’ ஆனால், வெற்றியை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் முறை தொடரும் என்றும், அதுவும் ‘டை’ ஆகும் பட்சத்தில், வெற்றியை நிர்ணயிக்க வேறொரு வழிமுறை கண்டறியப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.