வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் நிறுவனம் ஊழியர்கள் நலன் சார்ந்த சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

2016ம் ஆண்டுக்கு குழந்தை பெற்ற பெற்றோருக்கு 12 வாரங்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளி க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தாய் மற்றும் தந்தைக்கும் பொருந்தும். ஏற்கனவே 6 வாரங்கள் மட்டுமே இந்த விடுப்பு அளிக்கப்பட்டது.

இது தவிர தாய்க்கு மருத்துவ குறைபாடு காலமாக மேலும் 6 முதல் 8 வாரங்கள் கூடுதலாக விடுப்பு அளிக்கப்படும். ஒராண்டுக்குள் இந்த விடுப்பை பெற்றோர் எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு கூடுதல் விடுப்பு அளிக்கப்படும்.

இது குறித்து ஐபிஎம் துணைத் தலைவர் பார்பரா பிரிக்மீலர் கூறுகையில், ‘‘ பிற நிறுவனங்கள் என்ன சலுகைகள் வழங்குகின்றன என்பதை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். பெண்களை பணியில் அமர்த்துவது என்பது தற்போது முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. மேலும், ஊழியர்கள் கோரியுள்ள சலுகைகளும் பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.

மேலும், குழந்தை தத்தெடுக்கும் ஊழியர்களுக்கு அதற்கான கட்டணமான 20 ஆயிரம் டாலர் நிதி அளி க்கப்படவுள்ளது. முன்பு இது 5 ஆயிரம் டாலராக இருந்தது. வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பெண் ஊழியர்கள் குழந்தைகளுக்கு தாய் பால் பதப்படுத்தப்பட்டு அனுப்பிவைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான அனைத்து செலவும் ஐபிஎம் ஏற்கும். ஏற்கனவே அமெரிக்காவுக்குள் பயணிக்கு ஊழியர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இந்த திட்டத்தில் இனி பயன்பெறுவார்கள்.

விடுப்பு நீட்டிப்பு செய்யப்பட்ட சலுகைகள் அமெரிக்காவில் உள்ள அனைத்து முழு நேரம் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் மட்டும் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.