ஜெய்ப்பூர்:
ஜன்தா கா ரிப்போர்ட்டர் என்ற இணைய தள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செய்தி ஆசிரியராக ரிஃபாத் ஜாவித் என்பவர் உள்ளார். இந்த இணையதள செய்தி நிறுவனத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில பாஜ அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சய் தீக்ஷத் செயல்பட்டு வருகிறார்.
ரிஃபாத் மீது தனிப்பட்ட முறையில் டுவிட்டரில் விமர்சனம் செய்து வரும் அவர், ரிஃபாத் முகவரியை வெளியிடுமாறு தனது பின் தொடர்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சஞ்சய் தீக்ஷத், பாஜ ஆதரவு அதிகாரி. இஸ்லாமிய விரோத செய்திகளை டுவிட்டர்களில் பகிர கூடியவர். இவர் தற்போது துறை விசாரணை பிரிவு ஆணையராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் வசுந்தரா ராஜே அரசில் சமஸ்கிருத கல்வி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் இன்று ஜன்தா கா ரிப்போர்ட்டர் இணையதளம் மற்றும் அதன் செய்தி ஆசிரியரை ஆம் ஆத்மி கட்சியின் ஊதுகுழல் என்றும், இந்த இணையதளத்துக்கும் இஸ்லாமிய அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவை முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ரிஃபாத் டேக் செய்துள்ளார். ‘‘தங்களது அரசின் கீழ் பணியாற்றும் ஒரு அரசு ஊழியர் இத்தகைய பணிகளில் ஈடுபடலாமா? என்றும் தீக்ஷத் தொடர்ந்து இஸ்லாமியம் மற்றும் தனி நபர்கள் மீதான விமர்சனங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஃபாத் வீட்டு முகவரியை வெளியடுமாறு டுவிட்டரில் தீக்ஷித் பதிவிட்டிருந்தார். அவரது பின் தொடர்பாளர் ஒருவர் முகவரியை வெளியிட்டிருந்தார். இதை தீக்ஷித் டுவிட்டரில் மீண்டும் பகிர்ந்திருந்தார்.
இது குறித்து ரிஃபாத் கூறுகையில்,‘‘ தீக்ஷித் அதிகப்படியாக செயல்பட்டுள்ளார். அரசு பணியாளருக்கான அனைத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் தூக்கி எறிந்த முதல் ஐஏஎஸ் அதிகாரியாக இவராக தான் இருப்பார்.
தற்போது முஸ்லிம்கள் ஆங்காங்கே படுகொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். அவரது அனைத்து பதிவுகளும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன்’’ என்றார்.