மெல்போர்ன்: உள்நாட்டு ஆஸ்திரேலிய தொடர்களை, ஐபிஎல் தேதிகள் இடையூறு செய்தால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் மற்றும் ஒன் டே கப் போன்ற உள்நாட்டு தொடர்களை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு பேசியுள்ளார். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் என்கின்றனர்.
அவர் கூறியுள்ளதாவது, “முன்னணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை நம் நாட்டு கிரிக்கெட் வாரியம் செழிப்பாகவே வைத்துள்ளது. எனவே, உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவர்களின் கடமை.
இதன்மூலம் கிரிக்கெட் என்பது இந்தியாவைச் சுற்றி சுழலவில்லை என்பதைத் தெரிவிக்க முடியும். அதேசமயம், முன்னணி வரிசையில் இல்லாத வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் அதை நான் குற்றம்சொல்ல மாட்டேன். ஏனெனில், அவர்களின் நிலைமை எனக்குப் புரிகிறது.
ஆனால், முன்னணி வீரர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால், அவர்கள் தாய்நாட்டு கிரிக்கெட்டிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றுள்ளார் இயான் சேப்பல்.