கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடாததால் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாத ஜோகோவிச் 21 வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெரும் வாய்ப்பை இழந்தார்.

பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் வரிசையாக நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்க தடுப்பூசி போட்டுக் கொள்வீர்களா என்று பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்டது.

ஆஸ்திரேலிய விசா மறுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறிய பின் ஜோகோவிச் அளித்திருக்கும் முதல் பேட்டி இது.

அதில், “நான் ஒருபோதும் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் எனது உடலில் எதைப் போடுவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்னிடம் உள்ளது. என்னால் முடிந்தவரை என் உடலுடன் ஒத்துப்போக முயற்சிக்கிறேன்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன், அதற்காக நான் பங்கேற்க முடியாவிட்டாலும் வருத்தப்பட மாட்டேன்” என்று கூறினார்.

மேலும், “நாம் அனைவரும் கூட்டாக, கோவிட் தொற்றை முடிவுக்கு கொண்டு வர ஒரு சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அதனால், எதிர்காலத்தில் தடுப்பூசி போடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.