பெங்களூரு: தான் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்றும், பாரதீய ஜனதா கட்சியின் ஜனநாயகப் படுகொலைகளையும், அக்கட்சியின் தரத்தையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
அவர் கூறியிருப்பதாவது, “பாரதீய ஜனதாக் கட்சி, கர்நாடக அரசியலை மட்டும் சீர்குலைக்கவில்லை. மட்டமான அரசியலை நடத்துவதற்கான ஒரு புதிய அளவுகோலையே தீர்மானித்து வருகிறது அக்கட்சி. நான் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. பாரதீய ஜனதாவின் பித்தலாட்டங்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது விருப்பம்.
கவர்னர் மாளிகையை பகடைக் காயாகப் பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான காலக்கெடுக்களை விதிக்கிறது அக்கட்சி. ஆளுங்கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று அடைத்து வைத்துள்ளது அக்கட்சி. பாரதீய ஜனதா தலைவர்களும் நிர்வாகிகளும், எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பு விமானத்தில் மும்பை செல்லும் வீடியோக்களே இதற்கு சாட்சி.
நான் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கேட்கும் பாரதீய ஜனதா, தனது நோக்கத்திற்காக ஆளுநர் மாளிகையை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் நன்னெறியைப் பற்றி பேசிக்கொள்ளும் பாரதீய ஜனதா, நடைமுறையில் அவற்றை எப்படி அலங்கோலப்படுத்துகிறது மற்றும் அரசியல் சாசனத்தை எப்படி கேலிக்குள்ளாக்குகிறது என்பதை நாடே பார்க்கிறது” என்றார்.
மேலும், மும்பை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கர்நாடகம் திரும்பி, சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார் குமாரசாமி.