சண்டிகர்: பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆம்ஆத்மி பதவி ஏற்பு விழா, பகத் சிங் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள கிராமத்தில் நடைபெறும் என்று கூறியதுடன் பல்வேறு அதிரடி தகவல்களையும் தெரிவித்து உள்ளார்.

நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், பஞ்சாபில் மட்டும் ஆம்ஆத்மி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், அங்கு ஆம்ஆத்மி கட்சி 92  இடங்களில் முன்னணியில் உள்ளது.  இதனால் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அங்கு மற்ற கட்சிகளான காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் பாஜக 2  இடங்களிலும, சிரோன்மணி அகாலிதளம் 5 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

பஞ்சாப் வெற்றி குறித்து நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், கட்சி அலுவலகம் முன்பு கூடிய  கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஆம்ஆம்மி கட்சிக்கு மகத்தான வெற்றி கொடுத்த  மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மாநிலத்திற்காக உழைக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், ஆம்ஆத்மி அமைச்சரவை  பதவியேற்பு விழா ராஜ் பவனுக்கு பதிலாக கட்கர் காலன் கிராமத்தில் அதாவது பகத் சிங் அருங்காட்சியம் அமைந்துள்ள கிராமத்தில் நடைபெறும் என்று கூறியதுடன், மாநிலத்தில் வேலை யில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பணியாற்றுவேன். பஞ்சாபின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

மேலும், இனிமேல், பஞ்சாப் மாநில அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் புகைப்படங்கள் இடம் பெறாது. அதற்கு பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் கூறினார்.