டில்லி:
பிரியங்கா காந்தியின் கணவரும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தொல்லை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம், ராபர்ட் வதேராவிடம் எப்போது அரசியலில் குதிக்கப்போகிறீர்கள், தேர்தலில் எப்போது போட்டியிடப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு தெளிவாக பதில் அளித்துள்ள ராபர்ட் வதேரா, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. முதலில் நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளவர், நான் கட்சியில் இணைந்து பணியாற்றுவேன்.. ஆனால், அதற்கு இப்போது அவசரம் இல்லை… என்னால் மாற்றம் கொண்டு வர முடியும் என்று மக்கள் எப்போது நினைக்கிறார்களோ அப்போது நான் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில், பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டு, அவர் தீவிர அரசியலில் குதித்துள்ள நிலையில், அவரது வருகையை கண்டு அரண்டுபோய் உள்ள பாஜக, பிரியங்கா கணவர் மீதான புகார்களை தூசி தட்டியெடுத்து குடைச்சல் கொடுத்து வருகிறது.
பிரியங்கா காந்தி உ.பி. கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பதவி அன்றே, ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நெருக்குதல் கொடுத்தது. தொடர்ந்து அவரது அம்மா உள்பட பலரை விசாரணைக்கு அழைத்து நெருக்குதல் கொடுத்து வருகிறது. பிரியங்காவை எதிர்கொள்ள முடியாமல் அவரது கணவர் வதேராவுக்கு மத்தியஅரசு தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பபட்டு வருகிறது. இதன் காரணமாக வதேராவும் விரைவில் அரசியலில் நுழைவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தொண்டர்களும், ராபர்ட் வதேராவை அரசியலுக்கு வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் எப்போது, என்னால் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறார்களோ அப்போது நான் வருவேன் என்று கூறி உள்ளார்.