அகமதாபாத்: “எனக்கு வீசப்படும் பந்தை கணித்து, அதற்கேற்ப செயல்படுவேன். அதுதான் எனக்கான ஆட்ட உத்தி” என்று பேசியுள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்.
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், ஒரு நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பன்ட், மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து, அணியை ஆபத்திலிருந்து மீட்டார். இதன்பொருட்டு அவருக்கு பலதரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு விருப்பமான வகையில் விளையாடும் உரிமை எனக்கு பலநேரங்களில் கிடைக்கிறது. அதேசமயம், ஆட்டத்தின் சூழலை உணர்ந்து, அதற்கேற்ப ஆட்டத்தை நகர்த்திச் செல்ல வேண்டியுள்ளது.
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினால், அதற்கேற்ற மரியாதை கொடுக்க வேண்டும். என்னை நோக்கி வரும் பந்தைப் பார்த்து நான் அதற்கு எதிர்வினையாற்றுகிறேன்.
இந்த ஆட்டத்தில், ரோகித்துடன் நான் இணைந்தபோது, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆடுகளத்தைக் கணித்து, அதற்கேற்ப ஆட வேண்டுமென திட்டமிட்டேன்.
இங்கிலாந்து அணியின் 205 ரன்களைக் கடக்க வேண்டுமென்பதுதான் அணியின் அடிப்படை நோக்கமாக இருந்தது. எனவே, எந்தளவிற்கு ரன்களை சேர்க்க முடியுமோ, அதில் கவனம் செலுத்தினோம்” என்றுள்ளார் பன்ட்.