சென்னை :

தான் தொடங்கப்போகும் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை தன்னை வெற்றி பெற செய்த ஆர்.கே.நகர் தொகுதியிலேயே அறிவிப்பேன் என்று டிடிவி தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், டிடிவி தினகரனும், தனது அணி சார்பாக ஜெ. பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடைபெற்ற  ஜெயலலிதா பிறந்தநாள்  பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு டிடிவி தினகரன் பேசினார்.

அப்போது, தனக்கு இந்த தொகுதி மக்கள் அளித்த வெற்றியின் காரணமாக, மக்கள் அரசியலுக்கான மூன்றாவது அத்தியாத்தை தொடங்கி வைத்துள்ளார்கள் என்று கூறினார்.

ஏற்கனவே, திமுகவை அண்ணா ராயபுரம் ராபின்சன் பூங்காவில் வைத்துத் தொடங்கினார். அதுபோல இப்பகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்து உள்ளனர் என்றார். விரைவில் துரோகிகளை அழிக்கும் பணி தொடங்கும் என்று பேசிய டிடிவி, தான் புதிதாக  கட்சி தொடங்க 3 பெயர்கள தேர்தல் கமிஷனிடம் கொடுத்திருப்பதாகவும், விரைவில் கட்சி பெயர் குறித்து தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அதன்பிறகு என்னை வெற்றிபெற வைத்த ஆர்.கே.நகர் தொகுதியில்தான், நான் புதிய கட்சியை தொடங்குவேன் என்றும், கட்சியின் பெயரை அப்போது அறிவிப்பேன் என்றும் கூறினார்.