இந்தூர்: கழிவறையையும் சாக்கடையையும் சுத்தம் செய்வதற்காக நான் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச மாநில போபால் தொகுதியின் உறுப்பினருமான சாத்வி பிரக்யா.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் நகரில் ஓரிடத்தில் ஆட்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் பிரக்யா தாகூர், “நான் சாக்கடை அல்லது கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை. நான் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அந்தப் பணியை கண்ணியத்துடன் நிறைவேற்றுவேன்” என்றுள்ளார். அவர் பேசும் அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தூய்மை பாரத இயக்கத்தில் நாடு முழுவதும் முன்வந்து பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதே கட்சியின் உறுப்பினரான சாத்வி பிரக்யா இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில், மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கை தோற்கடித்தார் சாத்வி பிரக்யா என்பது குறிப்பிடத்தக்கது.